< Back
மாநில செய்திகள்
இன்று நவராத்திரி தொடக்கம்: விற்பனைக்கு வந்த கொலு பொம்மைகள்
மாநில செய்திகள்

இன்று நவராத்திரி தொடக்கம்: விற்பனைக்கு வந்த கொலு பொம்மைகள்

தினத்தந்தி
|
26 Sept 2022 3:09 AM IST

நவராத்திரியையொட்டி கொலு பொம்மைகள் விற்பனை களை கட்டியது. புதிய புதிய கொலு பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளது.

சென்னை,

மகத்துவம் தரும் நவராத்திரி இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. நவராத்திரியில் அம்மனை 9 நாட்களும் 9 விதமான அலங்காரம் செய்து பெண்கள் வழிபடுகிறார்கள்.நவராத்திரி விழாவின் முக்கிய அம்சம் கொலு. இது வாழ்க்கையின் யதார்த்தம், சூழ்நிலை, படைப்பின் ரகசியம் உள்ளடக்கிய பிரபஞ்சம் ஒன்றே என்பதை உணர்த்துவதே கொலுவின் உன்னதமான நோக்கமாகும்.

கால கட்டத்தை பிரதிபலிக்கும்

மனிதர்களுடன் பயணிக்கும் 9 நிலையை ஒவ்வொரு நாளும் நவராத்திரியின்போது, 9 நாட்கள் வீட்டில் கொலு வைத்து, தினமும் அம்மனுக்கு பிரசாதம் படைத்து, பஜனையுடன் வழிபடுவதை பின்பற்றி வருகிறோம்.ஒவ்வொரு ஆண்டும், அந்தந்த கால கட்டத்தை பிரதிபலிக்கும் புதிய கொலு பொம்மைகளை வாங்கி, வீட்டில் கொலு வைக்கின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு பல்வேறு கடைகளில், கொலு பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

கொலு பொம்மைகள்

சென்னையில் எங்கு பார்த்தாலும் கொலு பொம்மைகள்தான் நம்மை வரவேற்கிறது என்று சொல்லும் அளவிற்கு நிறைந்துள்ளது. விநாயகர், சிவன் உள்ளிட்ட இறைவன் சிலைகளுடன், இயற்கை, மனித வாழ்வியல் கலந்த பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

அந்த வகையில் சென்னை மயிலாப்பூரில் விதவிதமான பொம்மைகள் சாலையோரம் அடுக்கி வைக்கப்பட்டு விற்பனைக்கு வந்து இருக்கிறது. கண்களை கொள்ளை கொள்ளும் வகையில் கிருஷ்ணர் பொம்மை, திருமணம், வளைகாப்பு, காதணி விழா, திருமண பந்தம், திருமண ஊர்வலம் பொம்மைகள் இடம் பெற்றுள்ளது.

ஜெயலலிதா சிலை

ஜெயலலிதா உருவம் கொண்ட கொலு பொம்மை விற்பனைக்கு வந்துள்ளது, அதனை மக்கள் வாங்கி சென்ற காட்சிகளையும் பார்க்க முடிந்தது. கொலு பொம்மைகள் ரூ.50 முதல் ரூ.10 ஆயிரம் வரை கிடைக்கிறது. கொலு பொம்மை விற்பனை எப்படி உள்ளது?. மக்கள் விரும்பி வாங்குவது எந்த வகை பொம்மை? என்பது குறித்து சாலையோர பொம்மை வியாபாரி சந்தோஷ் கூறியதாவது:-

இந்த ஆண்டு விதவிதமான பொம்மைகள் விற்பனைக்கு வந்திருக்கிறது. மக்கள் அவர்களுக்கு பிடித்தமான கொலு பொம்மைகளை கேட்டு வாங்குகிறார்கள். சில பொம்மைகள் எங்களிடம் இருக்கும், சில பொம்மைகளை வரவழைத்து கொடுப்போம்.

வெயில் அதிகம்

வெயிலின் தாக்கம் ரொம்ப அதிகமாக இருக்கிறது. மக்களும் வெயில் நேரத்தில் கடைக்கு வருவதில்லை. இதனால் எங்களுக்கு இந்த முறை வியாபாரம் மந்தம்தான். மாலை வேளைகளில்தான் வியாபாரம் நடக்கிறது.திருமண கோல பொம்மைகளைதான் அதிகமாக வாங்குகிறார்கள். சிலர் தலைவர்களின் பொம்மைகளை கேட்டு வாங்குகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அம்மு என்பவர் கூறும்போது, 'அம்மன் சிலைகள், மேளதாளத்துடன் செல்லும் காட்சி, பசுக்கள் போன்ற பொம்மைகளை வாங்குகிறார்கள். வியாபாரம் என்பதெல்லாம் லாபம், நஷ்டத்தை பார்க்க முடியாது. ஒன்றை ஒன்று ஈடுகட்டி விடும்' என்றார்.

கொலு பொம்மைகளை வாங்குவதற்காக மயிலாப்பூர், தியாகராயநகர், புரசைவாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை வேளைகளில் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியதை பார்க்க முடிந்தது.

மேலும் செய்திகள்