நாட்டின் 75-வது சுதந்திர தினவிழா: கன்னியாகுமரி முதல் திருவனந்தபுரம் வரை ராணுவ வீரர்கள் நடைபயணம்
|நாட்டின் 75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி முதல் திருவனந்தபுரம் வரை ராணுவ வீரர்கள் நடைபயணம்.
கன்னியாகுமரி,
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் சுதந்திர தினவிழா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் இன்று 'திரங்கா யாத்ரா' தொடங்கியது.
75-வது சுதந்திர தின விழாவையொட்டி 75 இராணுவ வீரர்கள் தேசியக் கொடியை ஏந்தி கன்னியாகுமரியிலிருந்து நாகர்கோவில்,பூவார் வழியாக திருவனந்தபுரத்தில் வரும் 14-ம் தேதி முடிவடைகிறது. இதனை மேஜர் பகவத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த 'திரங்கா யாத்ரா' பிரிகேடியர் லலித் சர்மா தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக 75 ராணுவ வீரர்கள் 75 அடி நீளம் கொண்ட தேசியக் கொடியை தனி படகு மூலம் விவேகானந்தர் பாறைக்கு எடுத்துச் சென்றனர். அதை விவேகானந்தர் நினைவு மண்டபம் முன்பு 75- வது சுதந்திர தின விழாவை குறிக்கும் வகையில் 75 ராணுவ வீரர்களும் தங்களது கையில் தேசியக் கொடியை ஏந்தி மரியாதை செலுத்தினர்.
மேலும் 75 அடி நீளமும் 30 அடி அகலமும் கொண்ட தேசிய கொடியை விவேகானந்தரின் நினைவு மண்டபம் முன்பு ராணுவ வீரர்கள் பிடித்தபடி நின்றனர். அதனைத் தொடர்ந்து முக்கடல் சங்கத்தில் 'திரங்கா யாத்ரா' தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் விஜயகுமார், பால பிரஜாபதி அடிகளார், வாவத்துறை பங்கு தந்தை லகோரியஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.