< Back
மாநில செய்திகள்
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்
திருச்சி
மாநில செய்திகள்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்

தினத்தந்தி
|
13 Dec 2022 1:52 AM IST

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று திருச்சி கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் மேகராஜன், சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் தஞ்சை, கடலூர் மாவட்டங்களில் இருந்த ஆரூரான் சர்க்கரை ஆலைகள் விவசாயிகள் பெயரில் ரூ.160 கோடி கடன் பெற்று ஏமாற்றியதாகவும், அதை கண்டித்தும், ஆலை முதலாளியையும், வங்கி மேலாளர்களையும் கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

மேலும் இந்த போராட்டத்தில் கடந்த ஆண்டு அதிக மழையால் அழிந்த பயிர்களுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உதவிட வேண்டும். 60 வயதடைந்த விவசாயிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழக பகுதிகளில் பெய்யும் மழைநீர் ஆலடி அணை மூலமாக அரபிக்கடலில் கலக்காமல் தமிழகத்திற்கு திருப்பி விட வேண்டும். இதன் மூலம் கண்ணூத்து அணை, பொன்னணியாறு அணை வருடாவருடம் நிரம்பி தேனி, மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 2 கோடி விவசாயிகள் பயன் பெறுவார்கள். எனவே இந்த திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் கலெக்டரிடம் மனு கொடுக்க சென்றபோது அங்கு வாசலில் அமர்ந்து கண்டன கோஷம் எழுப்பினர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். இதையடுத்து கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதற்கு கலெக்டர் பிரதீப்குமார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

மேலும் செய்திகள்