< Back
மாநில செய்திகள்
திருத்துறைப்பூண்டியில் 17, 18-ந்தேதிகளில் தேசிய நெல் திருவிழா - கமல்ஹாசன் அழைப்பு
மாநில செய்திகள்

திருத்துறைப்பூண்டியில் 17, 18-ந்தேதிகளில் 'தேசிய நெல் திருவிழா' - கமல்ஹாசன் அழைப்பு

தினத்தந்தி
|
15 Jun 2023 11:03 PM IST

தேசிய நெல் திருவிழாவில் கலந்து கொள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் வரும் 17, 18 ஆகிய தேதிகளில் 'தேசிய நெல் திருவிழா' நடைபெற உள்ளது. இந்த நெல் திருவிழாவிற்கு அழைப்பு விடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது;-

"பல லட்சம் சொற்களைக் கொண்டது நமது தமிழ் மொழி. ஆனால் அன்றாடம் பேச்சிலும், எழுத்திலும் நாம் சில நூறு வார்த்தைகளைக் கூட பயன்படுத்து இல்லை. ஆயிரக்கணக்கான நெல் ரகங்கள் நம்மிடம் இருந்தன. 80 விழுக்காடு அரிசி உணவுகளையே உண்ணும் நாம் ஓரிரு ரக அரிசிகளை மட்டுமே இன்று பயன்படுத்துகிறோம். நமது பாரம்பரிய நெல் வகைகள் ஒவ்வொன்றின் சுவையும், மணமும், பயன்பாடும் வெவ்வேறானவை, மருத்துவ குணம் மிக்கவை.

'பல் போனால் சொல் போச்சி' என்பார்கள். நாம் சொல்லையும் இழந்து விட்டோம், நெல்லையும் இழந்து விட்டோம். நாம் மறந்து போன, நம்மை விட்டு மறைந்து போன நம் பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகளை மீட்பதில் ஒரு போராளியாகச் செயல்பட்டவர் நெல் ஜெயராமன். ஒரு தனி மனித இயக்கமாக அவர் கிராமம் கிராமமாகச் சென்று விவசாயிகளை சந்தித்து மறுகண்டுபிடிப்புச் செய்து நமக்குத் தந்தவர். அவர் கண்டுபிடித்தது 174 நெல் ரகங்கள்.

தனக்குப் பின்னரும் இந்த பேரியக்கம் தொடர்வதற்கான விதைகளை அவர் ஊன்றிச் சென்றிருக்கிறார். அதன் சாட்சியாக 'நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம்' தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அவரது வழித்தோன்றல்களும், நண்பர்களும் ஜெயராமன் ஏற்றிய விளக்கை அணையாமல் பாதுகாத்து வருகிறார்கள். பாரம்பரிய நெல் ரகங்களை சேகரித்து, பயிரிட்டு, பாதுகாத்து, மறு உற்பத்தி செய்து விவசாயிகளுக்கும், வேளாண் துறைக்கும், வேளாண் கல்லூரி மாணவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் விலையில்லாமல் கொடுத்து வருகிறது இந்த இயக்கம்.

நம்முடைய வரலாற்றை மீட்டெடுப்பதும், நீர்நிலைகளை மீட்டெடுப்பதும் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் நமது உணவு பண்பாட்டை மீட்பது. நாம் மரபாகச் செய்து வந்த பல விஷயங்களை மேற்குலகம் கைப்பற்றிக் கொண்டது. நாம் செய்ய வேண்டியது என்ன? நமது அன்றாட உணவில் பாரம்பரிய அரிசி ரகங்களையும், சிறுதானியங்களையும், நாட்டுக் காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பற்பல இடர்பாடுகளுக்கு மத்தியில் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளை ஆதரிக்க வேண்டும். அவர்களது முயற்சிகளுக்கு துணை நிற்க வேண்டும். வருகிற ஜூன் 17, 18 ஆகிய தேதிகளில் 'நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம்' திருத்துறைப்பூண்டியில் 'தேசிய நெல் திருவிழா 2023' என்ற நிகழ்வை நடத்துகிறது. இது நமது திருவிழா. தமிழ் மண்ணை, மக்களை, மொழியை காக்கும் பெருவிழா. தமிழ் நிலத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும். இவர்களை ஆதரிக்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்."

இவ்வாறு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்