< Back
மாநில செய்திகள்
சுற்றுலாத்துறை சார்பில் மாமல்லபுரத்தில் நாட்டிய விழா நாளை தொடக்கம்; சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

சுற்றுலாத்துறை சார்பில் மாமல்லபுரத்தில் நாட்டிய விழா நாளை தொடக்கம்; சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு

தினத்தந்தி
|
22 Dec 2022 4:15 PM IST

சுற்றுலாத்துறை சார்பில் மாமல்லபுரத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) நாட்டிய விழா தொடங்குகிறது. இதையொட்டி முன்னேற்பாடுகள் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாட்டிய விழா

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் ஆண்டுதோறும் சுற்றுலாத்துறை சார்பில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகளை கவரும் வகையில் ஒரு மாதம் நாட்டிய விழா நடைபெறுவது வழக்கம். நாட்டிய விழாவை கண்டுகளிக்க அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, ஜெர்மன், பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளில் இருந்து வெளிநாட்டினர் மாமல்லபுரம் வருவதுண்டு. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான விழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 12-ந்தேதி தேதி வரை 20 நாட்கள் நடைபெறுகிறது.

மாமல்லபுரம் கடற்கரை கோவில் நுழைவு வாயில் அருகில் திறந்தவெளி மேடையில் இந்த நாட்டிய விழா நாளை மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. விழாவுக்காக கடற்கரை கோவிலின் முகப்பு வாயிலில் உள்ள புல்வெளி மைதானத்தில் தற்போது திறந்தவெளி மேடை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

அமைச்சர் ஆய்வு

விழா முன்னேற்பாடுகளை பார்வையிடுவதற்காக தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று விழா நடைபெறும் மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்திற்கு வந்தார். அவரை மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பிறகு அவருக்கு விழா முன்னேற்பாடுகள் குறித்து உடன் வந்த தமிழக சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப்நந்தூரி விளக்கி கூறினார்.

கலைநிகழ்ச்சிகள்

அப்போது சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கடற்கரை கோவிலை பின்முகப்பாக கொண்டு மேடை அமைக்கப்பட்டு வருவதாகவும், விழாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைஞர்களின் பரதநாட்டியம், ஒடிசி, கதகளி, குச்சு புடி, மோகினியாட்டம், பொய்க்கால் குதிரை, கரகாட்டம், காவடியாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

பிறகு அமைச்சர் ராமச்சந்திரன் மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்திற்குள் நடந்து சென்று வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை குறித்தும், எந்த மாதியான சுற்றுலா மேம்பாட்டு பணிகள் தற்போது செய்யப்பட்டு வருகிறது என்பது குறித்தும் தொல்லியல் துறையினரிடம் கேட்டறிந்தார். அவருடன் செங்கல்பட்டு வருவாய் ஆர்.டி.ஓ. சஜ்ஜீவனா, திருக்கழுக்குன்றம் தாசில்தார் பிரபாகரன், மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ், மாமல்லபுரம் தொல்லியல் துறை அலுவலர் இஸ்மாயில், முன்னாள் பேரூராட்சி தலைவர் விசுவநாதன், பேரூராட்சி கவுன்சிலர் மோகன்குமார் உள்ளிட்ட பலர் வந்திருந்தனர்.

மேலும் செய்திகள்