காஞ்சிபுரம்
காஞ்சீபுரத்தில் கைத்தறி தேசிய தின விழா - கலெக்டர் தொடங்கி வைத்தார்
|காஞ்சீபுரத்தில் கைத்தறி தேசிய தின விழாவை கலெக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்தார்.
காஞ்சீபுரத்தில் 8-வது கைத்தறி தேசிய தின விழா நடைபெற்றது. காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்து, கைத்தறி கண்காட்சியை பார்வையிட்டு நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில்:-
நாடு முழுவதும் தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நெசவாளர்களை கவுரவிக்கும் விதமாக இந்த தினம் கடந்த 2015 -ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இந்திய சுதந்திர போராட்டத்தின்போது அந்நிய துணிகளை புறக்கணிக்கும் விதமாக சுதேசி இயக்கம் கடந்த 1905-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி தொடங்கப்பட்டது. அதன் நினைவாக கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டின் பாரம்பரியம், பண்பாடு உள்ளிட்டவற்றின் அங்கமாக கைத்தறி துணிகளை பயன்படுத்துவதால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயர வாய்ப்புள்ளது. மேலும், நமது நாட்டின் கலாசார பண்பாட்டை உலகுக்கு தெரிவிக்கும் இந்த தொழிலை மேம்படுத்த தமிழக அரசால் தள்ளுபடி மானிய திட்டம், வட்டி மானிய திட்டம், முத்ரா திட்டம், சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம், நெசவாளர்களுக்கான முழு மானியத்துடன் கூடிய வீடு கட்டும் திட்டம், முதியோர் ஓய்வூதிய நெசவாளர்களுக்கான காப்பீட்டு திட்டம் மற்றும் நல்வாழ்வு மருத்துவ காப்பீட்டு திட்டம் போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி. எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், கைத்தறி துறை துணை இயக்குனர் தெய்வானை, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.