< Back
மாநில செய்திகள்
தேசிய பேரிடர் மீட்பு படையினர் பாதுகாப்பு ஒத்திகை
திருச்சி
மாநில செய்திகள்

தேசிய பேரிடர் மீட்பு படையினர் பாதுகாப்பு ஒத்திகை

தினத்தந்தி
|
27 May 2023 1:18 AM IST

தேசிய பேரிடர் மீட்பு படையினர் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், தேசிய பேரிடர் மீட்பு படையின் சார்பில், நிலநடுக்கம் ஏற்பட்டு இடிந்த கட்டிடங்களுக்கு இடையே சிக்கிய நபர்களை மீட்பது போன்ற மாதிரி ஒத்திகை பயிற்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 4-வது பட்டாலியன் தேசிய பேரிடர் மீட்பு படை துணைத் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் டீம் கமாண்டர், பாதுகாப்பு அலுவலர், மதிப்பீடு அணியினர், தேடுதல் மற்றும் வெட்டுதல் அணியினர், மருத்துவ அணியினர், தகவல் தொடர்பு அலுவலர்கள், கயிறு மூலம் மீட்புப் பணி அணியினர் என 30-க்கும் மேற்பட்ட மீட்புப் படையினர் இந்த ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்த ஒத்திகை பயிற்சியின்போது, கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கும் பாதிக்கப்பட்ட நபரை கேமரா மூலம் கண்டறிவது, சுவற்றில் சுழலும் மீட்பு கருவிகள், துளையிட்டு மீட்கும் பணிகள், உயரமான கட்டிடத்தில் சிக்கிய நபரை கயிறு மற்றும் ஸ்டெச்சர் மூலம் மீட்கும் பணிகள் உள்ளிட்ட செயல்பாடுகளை நேரடியாக செய்து காண்பித்தனர். மேலும் மீட்கப்பட்ட நபர்களுக்கு முதலுதவி அளிப்பது, தொடர் சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லும் பணிகள் குறித்தும் செயல்முறை விளக்கம், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையினர் மூலம் செய்து காண்பிக்கப்பட்டன. தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையினரின் பேரிடர் காலத்தில் மீட்புப் பணிகளுக்கு உபயோகப்படுத்தும் உபகரணங்கள் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிபடுத்தப்பட்டிருந்தன. மேலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேரிடர் காலங்களில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் துணை பொது மேலாளர் முரளி, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர் அனுசியா, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை அலுவலர்கள், போலீசார், மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இந்த மாதிரி ஒத்திகை பயிற்சியினை பார்வையிட்டனர்.

மேலும் செய்திகள்