தேசிய தூயக்காற்று செயல்திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
|தேசிய தூயக்காற்று செயல்திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மனித உயிரிழப்புக்கு முக்கியக் காரணமாகத் திகழும் காற்று மாசுவைத் தடுக்கும் நோக்குடன் ஒவ்வொரு நாளும் செப்டம்பர் 7-ம் நாள் நீல வானுக்கான தூயக்காற்று பன்னாட்டு நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மனிதர்கள் உயிர்வாழ்வதற்கு காரணமாக இருக்கும் காற்று தான், மாசு அடையும் போது மனிதர்களின் உயிரிழப்புக்கு காரணமாகிறது. இதனால் ஆண்டுதோறும் உலகளவில் 70 லட்சம் பேரும், இந்தியாவில் 17 லட்சம் பேரும், சென்னையில் 11,000 பேரும் உயிரிழக்கின்றனர்.
உலக நலவாழ்வு அமைப்பின் காற்றுத் தர அளவுக்கு ஈடாகச் சென்னை மாநகரின் காற்றைத் தூய்மையாக மாற்றினால், சென்னைவாழ் மக்களின் சராசரி வாழ்நாளில் 4 ஆண்டுகளை அதிகமாக்க முடியும் என்று சிகாகோ பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது. இந்த நோக்கத்தை எட்டும் வகையில் சென்னை மாநகர தூய காற்றுச் செயல்திட்டம் மத்திய அரசு நிதியுதவியுடன் கடந்த 2021-ம் ஆண்டில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டம் 2021-22 முதல் 2025-26 வரையில் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. ஆனால், இந்தத் திட்டத்திற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கவில்லை. மாறாக மத்திய அரசு இத்திட்டத்திற்காக ஒதுக்கிய ரூ. 367 கோடியை மட்டும் 2023-ம் ஆண்டு வரை செலவிட்ட தமிழக அரசு, அதன்பிறகு இந்தத் திட்டத்தை முடக்கி வைத்து விட்டது. இச்செயல்திட்டத்தின் பெரும்பாலான கூறுகளை செயல்படுத்துவதற்கான காலக்கெடு ஏற்கனவே முடிவடைந்து விட்ட நிலையில், அவை இன்னும் செயல்படுத்தப்படவில்லை. மக்களின் உயிரோடு விளையாடும் இந்த செயல் கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உருவாக்கி 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்ட சென்னைப் பெருநகருக்கான காற்று மாசு தடுப்புச் செயல்திட்டம் அறிவியல்பூர்வமானதாகவோ தூய காற்று இலக்கினை அடைய வழிசெய்வதாகவோ இல்லை. உலக நலவாழ்வு அமைப்பும் ஐநா சுற்றுச்சூழல் திட்டமும் முன்வைக்கும் மெய்ப்பிக்கப்பட்ட தூய காற்றுத் திட்டங்களை இது கொண்டிருக்கவில்லை. மாறாக, அடுக்குமாடி வாகன நிறுத்தம் கட்டுவது, மேம்பாலங்கள் கட்டுவது, சாலைகளை விரிவாக்குவது உள்ளிட்ட காற்று மாசுபாட்டை அதிகமாக்கும் திட்டங்களைத் தான் தூய காற்றுத் திட்டமாக தமிழ்நாடு அரசு முன்வைத்தது. ஆனால், அந்த அரைகுறை திட்டத்தைக் கூட இன்னும் நிறைவேற்றாதது தமிழ்நாடு அரசின் கடமை தவறிய மிக மோசமான செயல் ஆகும்.
காற்று மாசுபாட்டைத் தடுப்பதன் மூலம் சென்னைப் பெருநகரின் ஒரு கோடிக்கும் கூடுதலான மக்களுக்கும், இனிவரும் பல தலைமுறையினருக்கும் நலவாழ்வை உறுதி செய்ய முடியும் என்பது அறிவியல்பூர்வமான உண்மை ஆகும். சென்னைப் பெருநகருக்கான தூய காற்றுச் செயல்திட்டம் அறிவியல்பூர்வமாக உருவாக்கப்பட வேண்டும்; அதன் கீழ் நுண் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். அவற்றைச் செயல்படுத்துவதற்கு தேவையான நிதியும் மனித வளமும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். குறித்த காலத்திற்குள் தூயக்காற்று திட்டங்கள் செயலாக்கப்படுவதை தமிழக அரசு கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.