தேசிய நல்லாசிரியர் விருது: தேர்வாகியுள்ள ஆசியர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
|கல்வித்துறையில் தமிழ்நாடு செய்து வரும் சாதனைகளுக்கு ஆசிரியர்களே அடித்தளம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
2023-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து 50 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து மதுரை அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மாலதி ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வாகி இருக்கும் இரண்டு ஆசிரியர்களுக்கும் பல்வேறு அரசியல்கட்சி தலைவர்கள் மற்றும் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசிய நல்லாசிரியர் விருது வென்ற இரண்டு தமிழக ஆசிரியர்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
"மதுரை, அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி, வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மாலதி ஆகிய இருவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்! கல்வித்துறையில் தமிழ்நாடு செய்து வரும் சாதனைகளுக்கு ஆசிரியர்களே அடித்தளம்!," என்று குறிப்பிட்டுள்ளார்.