தஞ்சாவூர்
62 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட நடராஜர் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
|62 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட நடராஜர் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
தஞ்சை அருகே உள்ள திருவேதிக்குடி வேதபுரீஸ்வரர் கோவிலில் 62 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட நடராஜர் சிலை அமெரிக்காவில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர். அந்த சிலையை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நடராஜர் சிலை திருட்டு
தஞ்சை அருகே உள்ள கண்டியூரை அடுத்த திருவேதிக்குடியில் பிரசித்தி பெற்ற வேதபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும்.
இந்த கோவிலுக்குள் கடந்த 62 ஆண்டுகளுக்கு முன்பு மர்ம நபர்கள் புகுந்து பழங்கால நடராஜர் சிலையை திருடிச்சென்றனர். இது குறித்து அதே ஊரைச் சேர்ந்த சம்மந்தம் சேதுராயர், நடுக்காவேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. மேலும் இந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்தநிலையில் சம்மந்தம் சேதுராயர் மகன் வெங்கடாசலம், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விசாரணை
அதன் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன் மேற்பார்வையில், கும்பகோணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திரா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சின்னத்துரை, போலீஸ்காரர் ஜெகதீசன் ஆகியோர் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், 62 ஆண்டுகளுக்கு முன்பு பழங்கால நடராஜர் சிலை திருடப்பட்டதும் அதற்கு பதிலாக போலியான நடராஜர் சிலையை அங்கு வைத்துவிட்டு சென்றதும், திருடப்பட்ட சிலை வெளிநாட்டிற்கு கடத்தி செல்லப்பட்டதும் தெரிய வந்தது.
தேடுதல் நடவடிக்கை
இதைத்தொடர்ந்து புதுச்சேரியின் இந்தோ-பிரெஞ்சு நிறுவனத்திடம் இருந்து நடராஜர் சிலையின் அசல் புகைப்படங்களை விசாரணைக் குழுவினர் கேட்டனர்.
பின்னர் அசல் சிலையின் படத்தை பெற்று கொண்ட அவர்கள் பல்வேறு அருங்காட்சியங்கள், கலைப்பொருட்கள் சேகரிப்பாளர்களின் சிற்றேடுகள், ஏல மையங்களின் வலைதளங்களில் உலகளாவிய தேடலை தொடங்கினர்.
அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
விரிவான தேடலுக்கு பிறகு அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில், திருவேதிக்குடி வேதபுரீஸ்வரர் கோவிலில் திருடப்பட்ட நடராஜர் உண்மையான சிலை இருப்பதை விசாரணைக்குழுவினர் கண்டுபிடித்தனர்.
அருங்காட்சியக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட சிலையின் படத்தை புதுச்சேரியில் உள்ள இந்தோ-பிரெஞ்சு நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட படத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது நியூயார்க்கில் உள்ளது நடராஜர் சிலை தான் என்பது நிரூபணம் ஆனது.
மீட்க நடவடிக்கை
இதனை தொடர்ந்து அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து நடராஜர் சிலையை மீட்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கோவிலில் வேறு ஏதேனும் சிலைகள் திருடப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
யுனெஸ்கோ ஒப்பந்தத்தின்படி நடராஜர் சிலையை மீட்டு வேதபுரீஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வர துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பாராட்டு
உண்மையான சிலையை கண்டுபிடித்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன் நேரடி மேற்பார்வையில் இயங்கும் இன்ஸ்பெக்டர் இந்திரா தலைமையிலான குழுவினரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இயக்குனர் ஜெயந்த் முரளி, போலீஸ் சூப்பிரண்டுகள் தினகரன், ரவி ஆகியோர் பாராட்டி வெகுமதி வழங்கினர்.