புதுக்கோட்டை
நாராயண பெருமாள் கோவில் திருக்கல்யாணம்
|ஆவுடையார்கோவில் அருகே நாராயண பெருமாள் சுவாமி கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாராயண பெருமாள் கோவில்
ஆவுடையார்கோவில் அருகே வடக்களூரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 15-ந் தேதி தொடங்கியது. இதையடுத்து அன்றிலிருந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையும், வீதி உலாவும் நடைபெற்றது. கடந்த 24-ந் தேதி ஸ்ரீதேவி, பூதேவி சமேத நாராயண பெருமாள் கருட வாகனத்தில் புறப்பட்டு ஆவுடையார்கோவில் நான்கு ரதவீதிகளிலும் சுற்றி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் வடக்களூர் கோவிலுக்கு திரும்பினார்.
திருக்கல்யாணம்
இதையடுத்து இன்று சுவாமிக்கு தங்க கவசம் சாற்றி, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக வடக்களூர் கிராமத்தார்கள் சார்பில் சீர்வரிசை பொருட்களை ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து வேதமந்திரங்கள், மேள தாளங்கள் முழங்க ஸ்ரீதேவி, பூதேவி சமேத நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடத்தி வைத்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை வடக்களூர் கிராமத்தார்கள், கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.