< Back
மாநில செய்திகள்
நாரணாபுரம் இ.எஸ்.ஐ. மருந்தகத்தை  இடமாற்ற கோரிக்கை
விருதுநகர்
மாநில செய்திகள்

நாரணாபுரம் இ.எஸ்.ஐ. மருந்தகத்தை இடமாற்ற கோரிக்கை

தினத்தந்தி
|
29 Sept 2023 3:24 AM IST

சிவகாசியில் இயங்கி வரும் இ.எஸ்.ஐ. மருந்தகத்தை நாரணாபுரம் கிராமத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என 6 கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி,

சிவகாசியில் இயங்கி வரும் இ.எஸ்.ஐ. மருந்தகத்தை நாரணாபுரம் கிராமத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என 6 கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாரணாபுரம்

சிவகாசி கிழக்கு பகுதியில் நாரணாபுரம் உள்ளது. இந்த பகுதியை சுற்றி உள்ள 6 கிராமங்களில் வசிக்கும் 20 ஆயிரம் பேர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இப்பகுதி மக்கள் வசதிக்காக மத்திய அரசு நாரணாபுரம் பகுதியில் இ.எஸ்.ஐ. மருந்தகம் அமைக்க அனுமதி வழங்கியது. ஆனால் அப்போது அதற்கான இடம் நாரணாபுரம் பகுதியில் இல்லை என்று கூறப்பட்டது.

இதை தொடர்ந்து அந்த மருந்தகம் சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் தொடங்கப்பட்டு தற்போது வரை இயங்கி வருகிறது. இதற்காக நாரணாபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள 6 கிராம மக்கள் 10 கி.மீ. தூரம் அலைய வேண்டிய நிலை உள்ளது.

மாற்றப்படுமா?

இந்த நிலையில் இந்த மருந்தகத்தை நாரணாபுரம் கிராமத்திற்கு மாற்ற வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் மனு அளித்தனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் நாரணாபுரம், அனுப்பன்குளம், பள்ளப்பட்டி, ஆலமரத்துப்பட்டி, முதலிப்பட்டி, செங்கமலப்பட்டி ஆகிய கிராமங்களில் வசித்து வரும் 20 ஆயிரம் தொழிலாளர்கள் 10 கி.மீ. தூரம் பயணம் செய்து சிவகாசிக்கு வர வேண்டிய நிலை உள்ளது. இதனை மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட இ.எஸ்.ஐ. மருந்தகத்தை நாரணாபுரம் பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கோரி உள்ளனர். நாரணாபுரம் புதூர் பகுதியில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் மகளிர் திட்டம் சார்பில் தொழில்கூடம் ஒன்று கட்டப்பட்டது. அந்த கட்டிடம் இதுவரை பயன்பாட்டிற்கு வராமல் முடங்கி கிடக்கிறது. இதனை இ.எஸ்.ஐ. மருந்தகமாக மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்