< Back
மாநில செய்திகள்
அவங்களும் நல்லா படிச்சு மேல வரணும்  நாங்குநேரி மாணவர் சின்னத்துரை பேட்டி
மாநில செய்திகள்

"அவங்களும் நல்லா படிச்சு மேல வரணும்" நாங்குநேரி மாணவர் சின்னத்துரை பேட்டி

தினத்தந்தி
|
7 May 2024 1:00 PM IST

மாணவர் சின்னதுரைக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் பேனாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்பளிப்பாக வழங்கினார்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்துரை. இவர் வள்ளியூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்தபோது மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற சாதிய பிரச்சினையில் சின்னத்துரை வீடு புகுந்து சக மாணவர்கள் சின்னத்துரை மற்றும் அவரது சகோதரியை பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த சின்னத்துரை, அவரது சகோதரி சந்திரா செல்வி ஆகியோர் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்கள். அப்போது நடந்த அரையாண்டு தேர்வை, ஆஸ்பத்திரியில் இருந்து எழுதினார்கள்.

இதைத்தொடர்ந்து அரசு அவருக்கு திருமால் நகரில் வீடு வழங்கி பாளையங்கோட்டையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தது. இந்தநிலையில் பிளஸ்-2 பொதுத் தேர்வை பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர் சின்னத்துரை எழுதினார். இதில் அவர் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண்களை எடுத்துள்ளார்.

தமிழ் - 71, ஆங்கிலம் - 93, பொருளாதாரம் - 42, வணிகவியல் - 84,கணக்குப்பதிவியல்- 85, கணிப்பொறி பயன்பாடு - 94 என மொத்தம் - 469 மதிப்பெண் பெற்றுள்ளார்.

இந்தநிலையில், சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் நாங்குநேரி மாணவர் சின்னத்துரை செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

என் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பி.காம் முடித்துவிட்டு, சி.ஏ. படிக்க வேண்டும் என விரும்புகிறேன். என்னை தாக்கியவர்களும் நன்றாக படிக்க வேண்டும். எல்லாரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அவர்களும் நல்லா படிச்சு மேல வரணும் என்றார்.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற நாங்குநேரி மாணவர் சின்னதுரைக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் பேனாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்பளிப்பாக வழங்கினார்.

மேலும் செய்திகள்