சென்னை
நங்கநல்லூரில் ஓட்டலில் இருதரப்பினர் மோதல்; 2 பேருக்கு வெட்டு
|நங்கநல்லூரில் ஓட்டலில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 2 பேர் கத்தியால் வெட்டப்பட்டனர்.
பழவந்தாங்கல்,
சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் லோகேஷ்வரன். இவர், தனது மனைவியுடன் நங்கநல்லூர் விஷ்வநாதபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டு கொண்டு இருந்தார். அப்போது எதிர் இருக்கையில் பழவந்தாங்கல் நேரு காலனியை சேர்ந்த அருணாச்சலம் (27) என்பவரும் சாப்பிட்டு கொண்டிருந்தார்.
அப்போது திடீரென இருக்கையைவிட்டு எழுந்த லோகேஷ்வரன், "நீ ஏன் எனது மனைவியை முறைத்து பார்க்கிறாய்?" என்று அருணாச்சலத்திடம் கேட்டார். இதனால் கோபமடைந்த அருணாச்சலம், "கண் இருந்தால் பார்க்கத்தான் செய்வார்கள்" எனக்கூறி லோகேஷ்வரன் மீது தண்ணீர் பாட்டிலை தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து லோகேஷ்வரன், செல்போனில் தனது நண்பருக்கு தகவல் சொல்லி வரச்சொன்னார். உடனே அருணாச்சலமும் போன் செய்து தனது நண்பர்களை வரும்படி அழைத்தார். இருதரப்பினரும் அங்கு வந்த போது கைகலப்பு ஈடுபட்டது.
இதில் லோகேஷ்வரனின் நண்பர் பார்த்திபன் தான் கொண்டு வந்த கத்தியால் அருணச்சாலத்தின் நண்பர் ஆல்பர்ட்டை இடது கை மணிக்கட்டு மற்றும் நெற்றி பொட்டில் வெட்டினார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனே அருணாச்சலம், பார்த்திபனிடம் இருந்த கத்தியை பறித்து லோகேஷ்வரனின் தலை மற்றும் வலது முழங்கையில் வெட்டினார். இது பற்றி தகவல் அறிந்துவந்த பழவந்தாங்கல் போலீசார் வெட்டுப்பட்ட ஆல்பர்ட், லோகேஷ்வரன் ஆகியோரை குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
மேலும் தகராறுக்கு காரணமான 2 தரப்பையும் சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.