< Back
மாநில செய்திகள்
நந்திவரம் பெரியார் நகர் பகுதியில் தொடர் மின்வெட்டு - மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

நந்திவரம் பெரியார் நகர் பகுதியில் தொடர் மின்வெட்டு - மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

தினத்தந்தி
|
7 Jun 2023 9:46 AM GMT

நந்திவரம் பெரியார் நகர் பகுதியில் தொடர் மின்வெட்டு காரணமாக மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை பல்வேறு இடங்களில் சூறாவளி காற்றுடன் அரை மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக கூடுவாஞ்சேரி, நந்திவரம், காயரம்பேடு, கன்னிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

ஆனால் மழை வருவதற்கு முன்பே நந்திவரம் பெரியார் நகர் பகுதிகளில் மதியம் 1 மணி அளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

மதியம் துண்டிக்கப்பட்ட மின்சாரம் 10 மணி நேரம் ஆகியும் வராததால் ஆத்திரம் அடைந்த நந்திவரம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூடுவாஞ்சேரி கொட்டமேடு செல்லும் சாலையில் புற்றுக்கோவில் எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் சாலைமறியலில் ஈடுபட்ட நந்திவரம் பெரியார் நகர் பகுதி மக்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாரிடம் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்கள் அதிக அளவு வசிக்கும் நந்திவரம் பெரியார் நகர் பகுதியில் தினந்தோறும் பல மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலமுறை கூடுவாஞ்சேரி மின்சார வாரிய அலுவலகத்தில் புகார் செய்தும் அதிகாரிகள் கண்டும் காணாமலும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனிமேல் இந்த பகுதியில் மின்வெட்டு பிரச்சினை ஏற்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு போலீசார் சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். சுமார் 1 மணி நேர ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு நந்திவரம் பெரியார் நகர் பகுதியில் மின்சாரம் வந்தது. இந்த சாலை மறியல் காரணமாக கூடுவாஞ்சேரி கொட்டமேடு சாலையில் செல்லும் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரிதும் அவதிப்பட்டனர்.

மேலும் செய்திகள்