< Back
மாநில செய்திகள்
நந்தம்பாக்கம் அடையாறு ஆற்றங்கரையோரத்தில் மறுகுடி அமர்த்துவதற்கான அறிவிப்பு பலகை நட பொதுமக்கள் எதிர்ப்பு
சென்னை
மாநில செய்திகள்

நந்தம்பாக்கம் அடையாறு ஆற்றங்கரையோரத்தில் மறுகுடி அமர்த்துவதற்கான அறிவிப்பு பலகை நட பொதுமக்கள் எதிர்ப்பு

தினத்தந்தி
|
10 Sept 2023 6:17 PM IST

நந்தம்பாக்கம் அடையாறு ஆற்றங்கரையோரத்தில் மறுகுடி அமர்த்துவதற்கான அறிவிப்பு பலகை நட முயன்ற மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்கள் போராட்டத்துக்கு பிறகு பணியை நிறுத்திவிட்டு திரும்பி சென்றனர்.

சென்னையை அடுத்த நந்தம்பாக்கம் அடையாறு ஆற்றங்கரையை ஒட்டி உள்ள பர்மா காலனி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அடையாறு ஆற்றை அகலப்படுத்தும் பணி மற்றும் கரையை சீரமைக்கும் பணிகளை தொடங்குவதற்காக கடந்த ஜூலை 31-ந்தேதி ஆற்றங்கரையை ஒட்டி அளவீடு செய்யப்பட்டு கான்கிரீட் கல் நட்டனர்.

இந்த நிலையில் நேற்று மாலை ஆலந்தூர் மண்டல மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் மணிமொழி, உதவி பொறியாளர் திருப்பதி ஆகியோர் பர்மா காலனி பகுதியில் ஆற்றங்கரையோர மக்களை மறுகுடி அமர்த்துவதற்கான அறிவிப்பு பலகையை நடுவதற்காக வந்தனர். இந்த நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் ஒன்றுகூடி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து பரங்கிமலை போலீஸ் உதவி கமிஷனர் முரளி, நந்தம்பாக்கம் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி ஆகியோர் பொதுமக்களிடம் சமரசம் பேசினார்கள். ஆனால் தங்கள் வாழ்வாதார பிரச்சினை என்பதால் அவகாசம் கொடுங்கள் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் கால அவகாசம் வழங்க முடியாது என்றனர். சுமார் 3 மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு அறிவிப்பு பலகை நடும் பணியை நிறுத்திவிட்டு அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

மேலும் செய்திகள்