< Back
மாநில செய்திகள்
நாணப்பரப்பு மாரியம்மன் கோவில் தேரோட்டம்
கரூர்
மாநில செய்திகள்

நாணப்பரப்பு மாரியம்மன் கோவில் தேரோட்டம்

தினத்தந்தி
|
25 April 2023 7:06 PM GMT

நாணப்பரப்பு மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேர்த்திருவிழா

கரூர் மாவட்டம், நாணப்பரப்பு மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நடைபெற்றது. தேர்த்திருவிழாவை முன்னிட்டு கடந்த 9-ந் தேதி இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கடந்த 16-ந் தேதி கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 23-ந் தேதி இரவு வடிசோறு நிகழ்ச்சி நடைபெற்றது. 23-ந் தேதி பூத்தட்டு அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

நேற்று காலை 8 மணிக்கு மேல் தீக்குண்டத்தில் இறங்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி மேளதாளங்கள் முழங்க உற்சவர் மாரியம்மன் சிறப்பு அலங்கார சிலை உடன் ஊர்வலமாக பகல் சுமார் 12 மணி அளவில் கோவிலை வந்தடைந்தனர். பின்னர் கோவில் வளாகத்தின் முன் அமைக்கப்பட்டு இருந்த தீக்குண்டத்தில் ஏராளமான ஆண்களும், பெண்களும் ஒருவர் பின் ஒருவராக இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக மாரியம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

தேரோட்டம்

அதனை தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 3 மணிக்கு மேல் உற்சவர் மாரியம்மன் தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து உற்சவ அம்மனை சிறப்பு அலங்காரத்துடன் தேரில் எழுந்தருள செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச்சென்றனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் அதன் நிலையை அடைந்தது. தொடர்ந்து அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து பொங்கல் பூஜையும், மாவிளக்குகளை கொண்டு வந்து மாவிளக்கு பூஜையும் செய்தனர்.

போலீஸ் பாதுகாப்பு

இரவு வாணவேடிக்கை நடைபெற்றது. அன்று காலை கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதையடுத்து இன்று (புதன்கிழமை) காலை கம்பம் பிடுங்கி கிணற்றில் விடுதல் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

தேர் திருவிழாவை முன்னிட்டு வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் நெப்போலியன், சரவணன் மற்றும் ஏராளமான போலீசார் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை மாரியம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்