விழுப்புரம்
தமிழில் பெயர் வைத்து தமிழ்மொழி மீதான பற்றை வளர்க்க வேண்டும்
|பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்து தமிழ்மொழி மீதான பற்றை வளர்க்க வேண்டும் என்று விழுப்புரத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் கர்ப்பிணிகளுக்கு அமைச்சர் பொன்முடி அறிவுரை வழங்கினார்.
சமுதாய வளைகாப்பு விழா
விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நேற்று ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்துறையின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி தலைமை தாங்கினார். நா.புகழேந்தி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்துகொண்டு கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
சிறப்பு திட்டங்கள்
கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமாக இருந்திடும் வகையிலும், கருவில் இருக்கும் குழந்தை நல்ல உடல்வளர்ச்சியுடன் ஆரோக்கியத்துடன் இருந்திடும் வகையிலும் அனைத்து அங்கன்வாடி மையங்கள் மூலமாக கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்து அடங்கிய உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. பெண்கள் தாய்மை அடைவது மிகச்சிறந்த ஒரு உன்னதமான நிகழ்வு என்பதை அறிந்து சாதி, சமய வேறுபாடின்றி அரசின் சார்பில் சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு 1,400 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெறவுள்ளது. இதன் தொடக்க நிகழ்வாக தற்போது விழுப்புரம் நகர்ப்புற வட்டாரத்தை சேர்ந்த 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் கர்ப்பிணி பெண்களுக்கு 5 வகையான ஊட்டச்சத்து உணவுகள், வளையல்கள், பூமாலை, பழங்கள், மஞ்சள், குங்குமம், தாம்பூலம் மற்றும் கர்ப்பகால பராமரிப்பு கையேடு ஆகியவை சீர்வரிசையாக வழங்கப்படுகிறது.
தமிழில் பெயர் வையுங்கள்
இங்கு வருகைபுரிந்துள்ள கர்ப்பிணிகள் அனைவரும் மருத்துவர்களின் ஆலோசனையின்படி முறையாக ஊட்டச்சத்து உணவு மற்றும் மருந்து உள்ளிட்டவை எடுத்துக்கொண்டு நல்ல உடல் ஆரோக்கியத்துடன் கூடிய குழந்தையை பெற்றெடுக்க வேண்டும். அதேவேளையில் ஒவ்வொரு கர்ப்பிணி தாய்மார்களும் தங்கள் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்து தமிழ்மொழி மீதான பற்றை வளர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) ஹரிதாஸ், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அன்பழகி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார், விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, நகராட்சி ஆணையர் ரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பணி நியமன ஆணை
தொடர்ந்து அங்கு நடந்த விழாவில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 10 பேருக்கு மாவட்ட வருவாய் அலகில் இளநிலை உதவியாளர் மற்றும் 7 பேருக்கு தட்டச்சு பணியிடத்திற்கான பணி நியமன ஆணையை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.