நீலகிரி
பழுதடைந்த நம்பியார் குன்னு சோதனைச்சாவடி
|தமிழக-கேரள எல்லையில் நம்பியார் குன்னு சோதனைச்சாவடி பழுதடைந்து உள்ளது. எனவே, புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பந்தலூர்
தமிழக-கேரள எல்லையில் நம்பியார் குன்னு சோதனைச்சாவடி பழுதடைந்து உள்ளது. எனவே, புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
போலீஸ் சோதனைச்சாவடி
பந்தலூர் அருகே நம்பியார் குன்னு பகுதியில் போலீஸ் சோதனைச்சாவடி தமிழக-கேரள மாநில எல்லையில் உள்ளது. இந்த சோதனைச்சாவடி பந்தலூரில் இருந்து கொளப்பள்ளி, அய்யன்கொல்லி வழியாக சுல்த்தான்பத்தேரி செல்லும் இணைப்பு சாலையில் இருக்கிறது. இங்கு போலீசார் சுழற்சி முறையில் பணிபுரிந்து வருகின்றனர். மாநில எல்லையில் இருப்பதால், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், போதைப்பொருட்கள் கடத்தப்படுகிறதா, சமூக விரோதிகள் நடமாட்டம் உள்ளதா என போலீசார் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.
இதுதவிர கேரள மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களில் நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால், அதனை பறிமுதல் செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது. நம்பியார் குன்னு பகுதியில் உள்ள சோதனைச்சாவடி கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது கட்டிடம் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டு, மழை பெய்யும் போது உள்ளே மழைநீர் கசிகிறது. இதன் காரணமாக போலீசார் அவதியடைந்து வருகின்றனர்.
புதிய கட்டிடம்
மேலும் மழைநீர் கசியாமல் இருக்க மேற்கூரை தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டு உள்ளது. அந்த கட்டிடம் அருகே ஆபத்தான மரம் இருக்கிறது. அந்த மரத்தில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. எனவே, போலீஸ் சோதனைச்சாவடிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, நம்பியார் குன்னு சோதனைச்சாவடி முன்பு உள்ள நெடுஞ்சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சிறு பாலத்தில் அடைப்பும் ஏற்பட்டு உள்ளது. இதனால் மழை காலங்களில் தண்ணீர் செல்ல வழி இல்லாமல், சாலையோரம் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் தவறி குழிக்குள் விழும் அபாயம் உள்ளது. மேலும் போலீஸ் சோதனைச்சாவடி பழுதடைந்து காணப்படுகிறது. எனவே, போலீசாரின் கண்காணிப்பு பணியை கருத்தில் கொண்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும். இதேபோல் ஆபத்தான மரத்தை அகற்றி, சிறு பாலத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.