புதுக்கோட்டை
நாமபுரீஸ்வரர்- தர்மஸம்வர்த்தினி திருக்கல்யாண வைபவம்
|ஆலங்குடியில் நாமபுரீஸ்வரர்- தர்மஸம்வர்த்தினிக்கு திருக்கல்யாண வைபவம் நேற்று நடைபெற்றது.
கோவில் கும்பாபிஷேகம்
ஆலங்குடி நகரில் அமைந்துள்ள அறம் வளர்த்த நாயகி சமேத பேரூராண்டார் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனைதொடர்ந்து தேரோடும் வீதியில் பட்டனப் பிரவேசமும், பரதநாட்டிய அரங்கேற்றமும் நடைபெற்றது. இதையடுத்து, ஈசன் நாமபுரீஸ்வரருக்கும், அம்பாள் தர்ம ஸம்வர்த்தினிக்கும் நேற்று திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதையொட்டி சுவாமி-அம்பாளுக்கு பல்வேறு விதமான அபிஷேகங்கள் நடைபெற்றன.
சந்தன காப்பு அலங்காரத்தில் ஈசன் காட்சியளித்தார். சிவனடியார்களால் திருவாசகம், முற்றோதுதல் நடைபெற்றன. இதில், 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருக்கல்யாணம்
பின்னர் சிறிய ரக தேரில் திருமண மேடை அமைக்கப்பட்டது. இதில், உற்சவ மூர்த்திகளான ஈசன், அம்பாள் திருவுருவங்கள் மணக்கோலத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிவன் கோவில் அருகே உள்ள நாடியம்மாள் கோவிலிருந்து திருமாங்கலியம், பட்டு வஸ்திரங்கள், தேங்காய், பழங்கள், இனிப்புகள் போன்ற சீர்வரிசைகளோடு, மேள, தாளம் முழங்க மணமேடைக்கு கொண்டு வரப்பட்டது. ஈசன்-அம்பாளுக்கு பட்டு வஸ்திரங்களால் அலங்காரம் செய்யப்பட்டு மாலைகள் அணிவிக்கபட்டன. பின்னர் சிவாச்சாரியார்கள் மந்திரங்களை ஓதினர். பல சடங்குகளுக்கு பின் புதிய திருமாங்கல்யம் கொண்டு ஈசன்-அம்பாளுக்கு திருமாங்கல்யம் சூட்டும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
தொடர்ந்து அபிஷேக ஆராதனை நடைபெற்றது. திருக்கல்யாணம் காண வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருக்கல்யாணத்தை சொர்ண பைரவ சிவாச்சாரியார் குழுவினர் நடத்தி வைத்தனர்.