< Back
மாநில செய்திகள்
நாமக்கல்லில் பிளஸ்-1 மாணவர் அடித்துக்கொலை: மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை
மாநில செய்திகள்

நாமக்கல்லில் பிளஸ்-1 மாணவர் அடித்துக்கொலை: மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை

தினத்தந்தி
|
24 Aug 2024 11:53 AM IST

உயிரிழந்த மாணவர் உடன் படித்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்படுகிறது.

எருமப்பட்டி,

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள நவலடிப்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன் ஆகாஷ் (வயது 16). இவர் வரகூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 கணினி அறிவியல் படித்து வந்தார். நேற்று மாணவர் ஆகாஷ் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றார்.

இதனிடையே இன்று (சனிக்கிழமை) பள்ளி வளாகத்தில் நடைபெற இருந்த கல்வி மேலாண்மை இயக்க நிகழ்ச்சிக்காக முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர் புஷ்பராஜ் நேற்று ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. அதற்காக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை அவர் அழைத்து உள்ளார்.

இந்த நிலையில் கூட்டத்திற்கு செல்ல நேற்று மாலை பள்ளி கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள வகுப்பறைக்கு வெளியே மாணவர் ஆகாஷ் வந்துள்ளார். அப்போது அவரின் செருப்பு காணாமல் போனதாக கூறப்படுகிறது. அதனால் அதிர்ச்சி அடைந்த ஆகாஷ் செருப்பை யார் எடுத்தது? எனக் கேட்டு கூச்சல் போட்டு உள்ளார். அப்போது அவரது நண்பரான சக மாணவர் ஒருவர், நான் தான் உனது செருப்பை எடுத்து பாதுகாப்பாக வைத்திருந்தேன், ஏன் இவ்வாறு பேசுகிறாய்? என கேட்டதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதோடு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் ஆகாஷை, மற்றொரு மாணவர் கடுமையாக தாக்கி உள்ளார்.

அப்போது ஆகாஷ் நிலை தடுமாறி மயங்கி விழுந்துள்ளார். அதைக்கண்ட சக மாணவர்கள் கூச்சலிட்டதால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் படுகாயம் அடைந்த மாணவர் ஆகாஷை மீட்டு கார் மூலம் எருமப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மாணவரை மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஆகாஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்த நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தராஜ் மற்றும் எருமப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், செருப்பு காணாமல் போனது குறித்து மாணவன் ஆகாஷ் கேட்டதை தொடர்ந்து ஏற்பட்ட தகராறில் சக மாணவர் தாக்கியதால் மயங்கி விழுந்து ஆகாஷ் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆகாஷை தாக்கிய பிளஸ்-1 மாணவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் எருமப்பட்டி அருகே பிளஸ்-1 மாணவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக உயிரிழந்த மாணவர் உடன் படித்த மாணவர்கள் மற்றும் அந்த பள்ளியின் ஆசிரியர்களிடம் தனித்தனியாக மாவட்ட கல்வி அலுவலர் விஜயன் விசாரணை நடத்தி வருகிறார்.

மாவட்ட கல்வி அலுவலர் விசாரணையை ஒட்டி பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்