< Back
மாநில செய்திகள்
நாமக்கல் மாவட்ட கலெக்டரை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் - போலீஸ் சூப்பிரண்டுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
மாநில செய்திகள்

நாமக்கல் மாவட்ட கலெக்டரை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் - போலீஸ் சூப்பிரண்டுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
3 Aug 2022 10:47 PM IST

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் நாமக்கல் மாவட்ட கலெக்டரை பிடித்து ஆஜர்படுத்த வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையத்தை சேர்ந்த பொன்ராசு என்ற ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் கூறியிருப்பதாவது,

எங்கள் ஊரில் உள்ள நெடுஞ்சாலைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து வீடு, கடைகளை பலர் கட்டியுள்ளனர். இதனால், எங்கள் கிராம மக்களால் சாலையை பயன்படுத்த முடியவில்லை. இதுகுறித்து கடந்த 2008-ம் ஆண்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று 2010-ம் ஆண்டு உத்தரவிட்டது.

ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால், பல முறை மாவட்ட கலெக்டருக்கும், நெடுஞ்சாலை மண்டல என்ஜினீயருக்கும் கடிதம் கொடுத்தேன். அதன்பின்னரும் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை.

தற்போது அங்கு வீடு, கடை என்று பல கட்டிடங்களை கட்டி ஆக்கிரமிப்பாளர்கள் வாடகைக்கு விட்டுள்ளனர். அந்த இடத்துக்கு பட்டா கேட்டும் விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து கடந்த ஆண்டு கலெக்டர் உள்ளிட்டோருக்கு கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நோட்டீஸ் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், நெடுஞ்சாலை துறை மண்டல என்ஜினீயர் சந்திரசேகரன் ஆகியோரை கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் விசாரித்தனர். அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் என்.உமாபதி, இந்த ஐகோர்ட்டு பல முறை உத்தரவிட்டும், அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அலட்சியமாக உள்ளனர். அதுமட்டுமல்ல இந்த வழக்கு விசாரணைக்கு நேரிலும் ஆஜராகவில்லை என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது,

இந்த வழக்கு கடந்த ஜூலை 12-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று இந்த ஐகோர்ட்டு கடந்த 2010-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை 3 வாரங்களில் அமல்படுத்த வேண்டும். இல்லையென்றால் கலெக்டரும், மண்டல என்ஜினீயரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டோம்.

அந்த உத்தரவின்படி தற்போது இந்த வழக்கு விசாரணைக்கு அதிகாரிகள் இருவரும் ஆஜராக வில்லை. ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வில்லை. எனவே, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், என்ஜினீயர் சந்திரசேகரன் ஆகியோருக்கு எதிராக ஜாமீனில் வெளி வரக்கூடிய பிடிவாரண்ட்டை பிறப்பிக்கிறோம்.

இந்த பிடிவாரண்ட்டை நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அமல்படுத்த வேண்டும். இரு அதிகாரிகளையும் பிடித்து, அவர்களை அடுத்த விசாரணையின்போது இந்த ஐகோர்ட்டில் அவர் ஆஜர்படுத்த வேண்டும். கலெக்டர் ஸ்ரேயா பி.சிங்கும், சந்திரசேகரனும், ரூ.50 ஆயிரத்துக்கான உத்தரவாத பத்திரத்தை போலீஸ் சூப்பிரண்டிடம் வழங்க வேண்டும். இந்த வழக்கு விசாரணையை வருகிற 16-ந் தேதிக்கு தள்ளி வைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்