நாமக்கல்: 28 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதம் - போலீசார் விசாரணை
|இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் பட்டறையில் 28 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன.
நாமக்கல்,
நாமக்கல்- துறையூர் சாலையில் கொசவம்பட்டியை சேர்ந்த சுரேஷ் என்பவர் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் பட்டறை நடத்தி வருகிறார். இவரது பட்டறைக்கு அருகே சம்பூரணம் என்பவர் பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவர் நிதி நிறுவனங்களில் பறிமுதல் செய்யப்படும் இருசக்கர வாகனங்களை வாங்கி, பட்டறையின் பின்புறம் உள்ள காலி இடத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம். சுரேஷும் தனது பட்டறைக்கு வரும் இருசக்கர வாகனங்களை அங்கு நிறுத்தி வைப்பார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல பணி முடிந்ததும் சுரேஷ் பட்டறையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் திடீரென அங்கு நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தது.
இது குறித்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் பல இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன.
இது குறித்து பட்டறை உரிமையாளர் சுரேஷ், சம்பூரணம் ஆகியோர் நாமக்கல் போலீசில் புகார் செய்து உள்ளனர். அதில் 28 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்து இருப்பதாகவும், அவற்றின் மதிப்பு சுமார் ரூ.17½ லட்சம் இருக்கும் எனவும் தெரிவித்து உள்ளனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.