< Back
மாநில செய்திகள்
நாமக்கல்: மகா மாரியம்மன் கோவிலில் 10,008 பால்குட அபிஷேகம்
மாநில செய்திகள்

நாமக்கல்: மகா மாரியம்மன் கோவிலில் 10,008 பால்குட அபிஷேகம்

தினத்தந்தி
|
5 Aug 2022 3:38 PM IST

நன்செய்இடையாறு மகா மாரியம்மன் கோவிலில் 10,008 பால்குட அபிஷேகம் நடைபெற்றது.

பரமத்தி வேலூர்,

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறில் மிகவும் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமை 10 ஆயிரத்து 8 பால்குட அபிஷேகமும், முதல் நாள் 1008 குத்துவிளக்கு பூஜையும் நடைபெறுவது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டும் பால்குட அபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று காலை மகா மாரியம்மனுக்கு கணபதி ஹோமமும், யாகவேள்ளியும் நடைபெற்றது. மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இரவு கோயில் வளாகம் முன்பு 1008 குத்துவிளக்கு பூஜையும் நடைபெற்றது. இதில் ஆயிரம் கணக்கான பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர்.

இன்று அதிகாலை முதல் பக்தர்கள் காவிரியாற்றுக்கு சென்று புனித நீராடி, பின்னர் பால்குடங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து குதிரை, பசு ஆகியவைகளுடன் காவிரி ஆற்றில் இருந்து பால்குடங்களுடன் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். பகல் 12- மணிக்கு மகா மாரியம்மனுக்கு 10 ஆயிரத்து 8 பால்குட அபிஷேகம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் கரூர், நாமக்கல், சேலம், திருச்சி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்