நாமக்கல்
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் சின்ராஜ் எம்.பி. திடீர் தர்ணா போராட்டம்
|நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் சின்ராஜ் எம்.பி. திடீர் தர்ணா போராட்டம்
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்து வருபவர் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த சின்ராஜ். இவர் நேற்று காலை 9.55 மணிக்கு நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்தார். பின்னர் அவர் திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பூங்கா அருகில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவரிடம் மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசன் தலைமையில் அதிகாரிகள் போராட்டத்தை கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் கைவிடவில்லை.
பின்னர் காலை 10.30 மணி அளவில் கலெக்டர் அலுவலகம் வந்த கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரடியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்ட சின்ராஜ் எம்.பி.யிடம் என்ன கோரிக்கை என கேட்டார். அதற்கு முதலில் என் அதிகாரம் என்ன? என்பதை தெரிந்து கொள்ளுங்கள் எனக்கூறி, ஒரு பைலை கலெக்டரிடம் கொடுத்தார்.
அதை வாங்கி கொண்ட கலெக்டர் பின்னர் அலுவலகத்திற்குள் சென்றுவிட்டார். தொடர்ந்து சின்ராஜ் எம்.பி. தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். மதியம் 1 மணிக்கு மீண்டும் எம்.பி.யை கலெக்டர் சந்தித்தார். அப்போது எம்.பி.யிடம் கலெக்டர் ஆகஸ்டு மாதத்தில் சாலை பாதுகாப்புக்குழு கூட்டம், ஒருங்கிணைந்த மாவட்ட வளர்ச்சிப்பணிகள் கூட்டம் நடத்த தேதி கேட்டார். மேலும் மின்வாரிய கணக்குக்குழு கூட்டம் நடத்துவதற்கு, கமிட்டி தேர்வு செய்ய வேண்டும். விதிமுறைகளை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். அதனால் பிறகு நடத்தி கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்தார். இதையடுத்து சுமார் 3 மணி நேரம் நடந்த தர்ணா போராட்டம் முடிவுக்கு வந்தது.
பின்னர் இதுகுறித்து சின்ராஜ் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
சாலை பாதுகாப்பு குழு கூட்டம், ஒருங்கிணைந்த மாவட்ட வளர்ச்சிப்பணிகள் கூட்டம், மின்வாரிய கணக்குக்குழு கூட்டம் ஆண்டுக்கு 4 முறை நடத்த வேண்டும். இது தொடர்பாக பல முறை கடிதம் அனுப்பியும், கலெக்டரிடம் இருந்து பதில் இல்லை. கூட்டத்தை நடத்துவதற்கு, அமைச்சர் தேதி கொடுக்க வேண்டும் எனக்கூறி காலதாமதம் செய்து வருகின்றனர்.
நான் சொல்லும் தேதியில், கலெக்டர் கூட்டம் நடத்த வேண்டும் என்பது விதி. கூட்டம் நடத்தப்படாததால் பல பணிகள் தேங்கி உள்ளன. இதனால் கால்நடைத்துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2¼ கோடி சுமார் 1¼ஆண்டாக கிடப்பில் போடப்பட்டு உள்ளது. அந்த நிதி திரும்பி சென்றுவிடும் சூழ்நிலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.