நாமக்கல்
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா: யாக சாலை அமைக்கும் பணி நிறைவு 30-ந் தேதி பூஜை தொடங்குகிறது
|நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாக சாலை அமைக்கும் பணி நிறைவடைந்தது. 30-ந் தேதி பூஜை தொடங்குகிறது
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாக சாலைகள் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. 30-ந் தேதி சிறப்பு பூஜையுடன் விழா தொடங்குகிறது.
ஆஞ்சநேயர் கோவில்
நாமக்கல் நகரில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்த கோவிலில் கடைசியாக 2009-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதற்கிடையே நடப்பாண்டில் கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டு ரூ.64 லட்சத்து 60 ஆயிரம் செலவில் கடந்த 9 மாதங்களாக திருப்பணிகள் நடந்தன. தற்போது பணிகள் முடிவடைந்து நவம்பர் மாதம் 1-ந் தேதி காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
இதையொட்டி நேற்று முன்தினம் முதல் நரசிம்மசாமி கோவில் வளாகத்தில் யாக சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், முழுமையாக யாகசாலை அமைக்கப்பட்டு, அதை சுற்றிலும் அலங்கார பந்தலும் போடப்பட்டு உள்ளது.
கண்காணிப்பு கேமராக்கள்
இதனிடையே நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக ஆஞ்சநேயர் கோவிலையொட்டி உள்ள தெருக்களில் பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக ஆஞ்சநேயர் கோவில் தெரு, கோட்டை பிள்ளையார் கோவில் தெரு, புது அக்ரஹார தெருக்களில் வழிநெடுகிலும் நீண்ட தூரத்திற்கு பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் உள்ள இரும்பு கம்பி கேட்டுகளுக்கு மெருகேற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக கோவில் வளாகம் மற்றும் அதை சுற்றியுள்ள தெருக்களில் 70-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக ஒயர்கள் மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட்டு தொழில்நுட்ப பரிசோதனையும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
அடிப்படை வசதிகள்
வருகிற 30-ந் தேதி யாகசாலை பூஜையுடன் விழா தொடங்க உள்ளது. 1-ந் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேக விழாவில் சுமார் 80 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அவர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.