< Back
மாநில செய்திகள்
நாமக்கல்லில்  மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4.42 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்  அமைச்சர் மதிவேந்தன், ராஜேஸ்குமார் எம்.பி. வழங்கினர்
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல்லில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4.42 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் மதிவேந்தன், ராஜேஸ்குமார் எம்.பி. வழங்கினர்

தினத்தந்தி
|
3 Dec 2022 6:45 PM GMT

நாமக்கல்லில் நடந்த அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் 12 பயனாளிகளுக்கு ரூ.4.42 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மதிவேந்தன், ராஜேஸ்குமார் எம்.பி. வழங்கினர்.

மாற்றுத்திறனாளிகள் தின விழா

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை தலைமை தாங்கினார். நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி. ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். விழாவில் அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது :-

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாங்கமும், சேவை வழங்கும் தொண்டு நிறுவனங்களும், பெற்றோரும், ஏனைய மனிதர்களும் உதவுவதும், இவர்களின் வாழ்க்கையில் எல்லோரையும் போல சகல உரிமைகளையும் பெற வைப்பதும் ஒரு சமுதாய கடமையாகும் என மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தின் நோக்கமாகும்.

தேசிய அடையாள அட்டை

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. தற்போதும் தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளின் நலனில் தனி கவனம் செலுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக ரூ.1,700 கோடி மதிப்பிலான திட்ட செயலாக்கத்தை மாநில அரசு செயல்படுத்துகிறது. நாமக்கல் மாவட்டத்தில் தற்போது வரை 45 ஆயிரத்து 538 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. சுமார் 16 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்குவதில், அவர்களை பராமரிப்பதில் தேசிய அளவில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது. சென்ற ஆண்டு இதற்கான விருதை குடியரசு தலைவரிடம் தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

நலத்திட்ட உதவிகள்

பின்னர் 4 பயனாளிகளுக்கு தலா ரூ.99,999 மதிப்பில் பேட்டரியால் இயங்கும் மடக்கு சக்கர நாற்காலி உள்பட மொத்தம் 12 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 42 ஆயிரத்து 436 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து அணைக்கும் கரங்கள் அறிவுசார் குறைபாடுடைய சிறப்பு பள்ளி உள்பட 7 சிறப்பு பள்ளிகளுக்கு பரிசு வழங்கப்பட்டன.

விழாவில் நாமக்கல் நகராட்சி தலைவர் கலாநிதி, நகராட்சி உறுப்பினர் சத்தியவதி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் உள்பட அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்