நாமக்கல்
நாமக்கல் போலி வங்கியில் முக்கிய ஆவணங்கள் சிக்கின பணியாளர்களிடம் பணம் வாங்கி கொண்டு வேலைக்கு அமர்த்தியது அம்பலம்
|நாமக்கல் போலி வங்கியில் முக்கிய ஆவணங்கள் சிக்கின பணியாளர்களிடம் பணம் வாங்கி கொண்டு வேலைக்கு அமர்த்தியது அம்பலம்
நாமக்கல் போலி வங்கியில் முக்கிய ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். பணியாளர்களை பணம் வாங்கி கொண்டு நியமனம் செய்து இருப்பதும் அம்பலமாகி உள்ளது.
ரூ.56.65 லட்சம் முடக்கம்
சென்னை அம்பத்தூர் லேடான் தெருவில் ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு வங்கி என்ற பெயரில் கடந்த ஓராண்டாக வங்கி ஒன்று இயங்கி வந்தது. இந்த வங்கியின் கிளைகள் மதுரை, விருத்தாச்சலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட 8 இடங்களில் இயங்கி வந்தன.
இந்த வங்கியின் தலைவராக சந்திரபோஸ் என்பவர் செயல்பட்டு வந்தார். அவர் ரிசர்வ் வங்கி அங்கீகாரம் கொடுத்தது போன்று போலி சான்றிதழ் தயாரித்து வங்கியை தொடங்கி உள்ளார். இதுகுறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சென்னை பெருநகர போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து வங்கியின் தலைவர் சந்திரபோசை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து போலியான பதிவு சான்றிதழ், வங்கி ஆவணங்கள், படிவங்கள், முத்திரைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து வங்கி கணக்கில் இருந்த ரூ.56 லட்சத்து 65 ஆயிரம் முடக்கம் செய்யப்பட்டது. மேலும் அவர் வங்கி அலுவலர்கள் பணிக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை பணம் பெற்று கொண்டு நியமனம் செய்திருப்பதும் தெரியவந்தது.
முக்கிய ஆவணங்கள் சிக்கின
நாமக்கல்லை பொறுத்தவரையில் இந்த வங்கி கிளை நாமக்கல்- மோகனூர் சாலையில் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் கடந்த சில மாதங்களாக இயங்கியது தெரியவந்தது. இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நாமக்கல் வந்து வங்கியில் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின்போது வங்கியில் 3 பெண்கள் உள்பட 4 பணியாளர்களிடம் பணம் பெற்று கொண்டு நியமனம் செய்திருப்பது தெரியவந்தது. மேலும் நூற்றுக்கணக்கான விவசாயிகளும் இந்த வங்கியில் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்து இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து வங்கி கணக்கு புத்தகம், கணினி சார்ந்த ஆவணங்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைப்பற்றி சென்றனர். இந்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.