< Back
மாநில செய்திகள்
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில்  தினசரி அபிஷேகத்திற்கான முன்பதிவு 13-ந் தேதி தொடக்கம்
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தினசரி அபிஷேகத்திற்கான முன்பதிவு 13-ந் தேதி தொடக்கம்

தினத்தந்தி
|
6 Nov 2022 12:15 AM IST

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தினசரி அபிஷேகத்திற்கான முன்பதிவு 13-ந் தேதி தொடக்கம்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் 2023-ம் ஆண்டுக்கான தினசரி அபிஷேக முன்பதிவு வருகிற 13-ந் தேதி தொடங்குகிறது.

ஆஞ்சநேயர் கோவில்

நாமக்கல் நகரில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆஞ்சநேயர் கோவிலில் தினசரி காலையில் நடை திறக்கப்பட்டு 9 மணி அளவில் 1,008 வடை மலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும்.

இதை தொடர்ந்து காலை 10 மணிக்கு மஞ்சள், குங்குமம், நல்லெண்ணெய், சீயக்காய், பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு வாசனை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து மதியம் 1 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

தினசரி அபிஷேகம்

சாமிக்கு தினசரி அபிஷேகம் மற்றும் வடை மாலை அலங்காரம் கட்டளைதாரர்கள் மூலம் நடத்தப்படுகிறது. அதற்காக ஒரு ஆண்டுக்கு முன்பே பக்தர்கள் முன்பதிவு செய்வது வழக்கம். ஒரு நாள் நடைபெறும் வடைமாலை அலங்காரம் மற்றும் அபிஷேகத்துக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் 5 பேர் முன்பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து பூஜையில் கலந்துகொள்ளும் கட்டளைதாரர்களுக்கு அபிேஷக முடிவில் பிரசாதம் வழங்கப்படும்.

அதன்படி 2023-ம் ஆண்டுக்கான ஆஞ்சநேயர் கோவிலில் அபிஷேக முன்பதிவு வருகிற 13-ந் தேதி தொடங்குகிறது அபிஷேகம் செய்ய விரும்பும் பக்தர்கள் கோவில் நிர்வாக அலுவலகத்தில் முழு தொகையையும் செலுத்தினால் மட்டுமே அபிஷேக தேதி முன்பதிவு செய்யப்படும். இல்லை என்றால் முன்பதிவு செய்யப்பட மாட்டாது என்று கோவில் உதவி ஆணையர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

தங்ககவசத்துக்கு ரூ.5 ஆயிரம்

இதேபோல் ஆஞ்சநேயருக்கு தங்ககவசம் அணிவிக்க ரூ.5 ஆயிரம், வெள்ளி கவசத்துக்கு ரூ.750, முத்தங்கி அலங்காரத்துக்கு ரூ.3 ஆயிரம், தங்கத்தேருக்கு ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்