< Back
மாநில செய்திகள்
நாமக்கல்லில்  மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள்  900-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல்லில் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் 900-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

தினத்தந்தி
|
7 Oct 2022 6:45 PM GMT

நாமக்கல்லில் நடந்த மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகளில் 900-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.

நாமக்கல்லில் நடந்த மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகளில் 900-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.

தடகள போட்டிகள்

நாமக்கல் மாவட்ட தடகள சங்கம் சார்பில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான இளையோருக்கான தடகள விளையாட்டு போட்டிகள் 2 நாட்கள் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. ஆண்களுக்கான தடகள போட்டிகளை கலெக்டர் ஸ்ரேயா சிங், தடகள சங்கத்தின் மாவட்ட தலைவர் ஏ.கே.பி.சின்ராஜ் எம்.பி., ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

14, 16, 18 மற்றும் 20 வயதுக்குட்பட்டோர் என 4 பிரிவுகளில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. ஓட்டப்பந்தய போட்டிகள், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் மற்றும் கயிறு ஏறுதல் உள்பட 40-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளின் மாணவர்கள் 900-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விளையாடினர்.

ஊக்குவிக்க வேண்டும்

விழாவில் கலெக்டர் ஸ்ரேயா சிங் பேசுகையில், விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வகையில் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும். போதை மற்றும் ஊக்க மருந்துகளை பயன்படுத்தக் கூடாது என பேசினார்.

இதையடுத்து ஈஸ்வரன் எம்.எல்.ஏ. பேசுகையில் கல்வி மாவட்டமாக திகழும் நாமக்கல்லில் அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே அதிகளவில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கிறார்கள்‌. தனியார் பள்ளி மாணவர்களின் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் மதிப்பெண்ணில் மட்டும் குறியாக இல்லாமல் விளையாட்டிலும் அவர்களின் திறமைகளை கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும் எனபேசினார்.

900 மாணவர்கள்

பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை சின்ராஜ் எம்.பி., ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. ஆகியோர். இதனை தொடர்ந்து விளையாட்டு மைதானத்துக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அ.தி.மு.க.வினர் வந்தனர். பின்னர் வேறு சில போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தங்கமணி பதக்கம், சான்றிதழ்களை வழங்கினார். அப்போது முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கர் மற்றும் அ‌.தி.மு.க.வினர் உடன் இருந்தனர்.

இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், மாநில அளவில் நடைபெற உள்ள விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளதாக தடகள சங்கத்தினர் தெரிவித்தனர். விழாவில் சங்கத்தின் செயலாளர் வெங்கடாஜலபதி, பொருளாளர் கார்த்திக் மற்றும் துணைத்தலைவர்கள், இணை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்