< Back
மாநில செய்திகள்
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில்  பா.ஜ.க.வினர் திடீர் தர்ணாவால் பரபரப்பு  அதிகாரிகள் பேச்சுவார்த்தை
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பா.ஜ.க.வினர் திடீர் தர்ணாவால் பரபரப்பு அதிகாரிகள் பேச்சுவார்த்தை

தினத்தந்தி
|
18 July 2022 9:51 PM IST

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பா.ஜ.க.வினர் திடீர் தர்ணாவால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பா.ஜ.க.வினர் திடீர் தர்ணாவால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நீர் நிரப்ப கோரிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் புள்ளாகவுண்டன்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் சோதனை ஓட்டம் நடத்த வேண்டும். அதன் மூலம் படைவீடு பேரூராட்சியில் பாதரை, பல்லாக்காபாளையம் மற்றும் சவுதாபுரம் கிராமங்களில் உள்ள ஏரிகளில் நீரை நிரப்பி நிலத்தடி நீர்மட்டம் உயர நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜனதா விவசாய அணி மாநில பொதுச்செயலாளர் கவிதா தலைமையில் பா.ஜ.க.வினர் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளிக்க வந்தனர். அப்போது அங்கு கலெக்டர் ஸ்ரேயா சிங் இல்லாததால், மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசன் மனுவை பெற்று கொண்டார். பின்னர் சம்பந்தப்பட்ட துறையினரிடம் மனுவை வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாக தெரிகிறது.

அதைத்தொடர்ந்து வெளியே வந்த பா.ஜ.க.வினர் மனுவை பெற கலெக்டர் நேரில் வர வேண்டும் என கூறி கலெக்டர் அலுவலக வளாகத்தில் விவசாய அணி மாநில பொதுச்செயலாளர் கவிதா தலைமையில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, விவசாய அணி மாவட்ட தலைவர் நடராஜன், பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் அங்கு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மனுவை பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் சரிவர‌ பதில் அளிக்காமல் மனுவை சம்பந்தப்பட்ட துறையினரிடம் வழங்கிவிட்டதாக புகார் தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தை

எனவே கலெக்டர் நேரில் வந்து மனுவை பெற்றுக் கொண்ட பிறகே கலைந்து செல்வோம் என தெரிவித்தனர். தகவல் அறிந்த கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்ரமணியன், நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். நாளை (இன்று) கலெக்டரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் பா.ஜ.க.வினர் அங்கிருந்து கலைந்தனர். இந்த போராட்டத்தில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் மனோகரன், மாவட்ட பொதுச் செயலாளர் வடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம்

இதுஒருபுறம் இருக்க பெரியார் பல்கலைக்கழகத்தை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. பட்டியல் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பட்டியல் அணி மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, பட்டியல் அணி மாநில நிர்வாகி ராம்குமார், விவசாய அணி மாநில பொதுச்செயலாளர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டியல் இன மக்களை அவமதிக்கும் வகையில் கேள்வித்தாளை தயார் செய்த பேராசிரியர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்ககோரி கோஷங்களை எழுப்பினர்.

இதில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் மனோகரன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் வடிவேல், சத்தியபானு, சேதுராமன், மாவட்ட துணைத்தலைவர்கள் முத்துக்குமார், வக்கீல் சந்திரசேகரன், மகேஸ்வரன், ரவிக்குமார், மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், விவசாயி அணி மாவட்ட தலைவர் நடராஜன், பட்டியல் அணி மாவட்ட பொதுச்செயலாளர் சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்