< Back
மாநில செய்திகள்
நாமக்கல்லில்  மாற்றுத்திறனாளிகள் பரிசோதனை முகாம்  46 பேருக்கு உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல்லில் மாற்றுத்திறனாளிகள் பரிசோதனை முகாம் 46 பேருக்கு உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை

தினத்தந்தி
|
18 Jun 2022 4:10 PM GMT

நாமக்கல்லில் மாற்றுத்திறனாளிகளுக்கான பரிசோதனை முகாம் நடந்தது. இதில் 46 பேருக்கு உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


நாமக்கல்லில் மாற்றுத்திறனாளிகளுக்கான பரிசோதனை முகாம் நடந்தது. இதில் 46 பேருக்கு உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பரிசோதனை முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்கு ஏதுவாக கலெக்டர் ஸ்ரேயா சிங் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக நாமக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வயது தளர்வு குறித்த பரிசோதனை முகாம் நடந்தது. கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கினார். அரசு டாக்டர்களை உள்ளடக்கிய மருத்துவ ஆய்வுக்குழுவினர் மாற்றுத்திறனாளிகளை பரிசோதிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அதன்படி குமாரபாளையம் வட்டத்தில் 8 பேரும், ராசிபுரம் வட்டத்தில் 19 பேரும், மோகனூர் வட்டத்தில் ஒருவரும், சேந்தமங்கலம் வட்டத்தில் 10 பேரும், திருச்செங்கோடு, நாமக்கல் மற்றும் பரமத்திவேலூர் வட்டத்தில் தலா 6 பேரும், கொல்லிமலை வட்டத்தில் 2 பேரும் என மொத்தம் 58 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அதில் அறிவுசார் குறைபாடு உடைய 8 பேர், கண்பார்வை குறைபாடு உடைய 4 பேர், கை, கால் பாதிக்கப்பட்ட 17 பேர், காது கேளாத 21 பேர் உள்பட 52 பேர் முகாமில் பரிசோதனைக்கு உட்படுத்தி கொண்டனர்.

உதவித்தொகைக்கு பரிந்துரை

பரிசோதனைக்கு பிறகு மாற்றுத்திறனாளிகள் 46 பேருக்கு வருவாய் துறையின் சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1,000 வழங்கவும், மேலும் 75 சதவீதத்திற்கு மேல் மாற்றுதிறன் உடைய 6 பேருக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் பராமரிப்பு உதவித்தொகை மாதம் ரூ.1,500 வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டது.

இந்த முகாமில் உதவி கலெக்டர் தேவிகா ராணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமுருக தட்சிணாமூர்த்தி, சிறப்பு டாக்டர்கள், அரசு அலுவலர்கள், மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்