நாமக்கல்
தமிழ் வளர்ச்சி துறை சார்பில்பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
|நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி நேற்று பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடந்தது. இதில் பொத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ரித்திஸ்ரீ முதல் பரிசும், வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் விபின் 2-ம் பரிசும், பள்ளிபாளையம் கிருஷ்ணவேணி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜன்னத் நிஷா 3-வது பரிசும் பெற்றனர். நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி மிதுனா ஸ்ரீநிதி மற்றும் போதுப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி நிஷா ஆகியோர் சிறப்பு பரிசு பெற்றனர்.
கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கலைக்கல்லூரி மாணவி கலையரசி முதல் பரிசும், காளிப்பட்டி மகேந்திரா கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) மாணவர் ஹரிஹரன் 2-வது பரிசும், ராசிபுரம் லயோலா கல்லூரி மாணவி பிரியதர்சினி 3-வது பரிசு பெற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-வது பரிசு ரூ.3 ஆயிரம், 3-வது பரிசு ரூ.2 ஆயிரம் மற்றும் 2 அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பரிசாக ரூ.2 ஆயிரம் மாவட்ட கலெக்டரால் வழங்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.