< Back
மாநில செய்திகள்
ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி நாம் தமிழர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி நாம் தமிழர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
20 Nov 2022 6:56 PM IST

செவ்வாப்பேட்டை ரெயில் நிலையம் அருகே ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு, நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை சென்டிரல் புறநகர் ரெயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் செல்லும் ரெயில்வே மார்க்கத்தில் செவ்வாப்பேட்டை ரோடு ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்தின் அருகே ஆவடி சாலையுடன் திருவூர் பகுதியை இணைக்கும் வகையில் கடந்த 2015-ம் ஆண்டு சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 660 மீட்டர் நீளமும் 30 மீட்டர் அகலமும் கொண்ட மேம்பாலமானது கட்டும் பணி தொடங்கி நடந்து வந்தது. இந்த பணிகள் 60 சதவீதம் முடிவடைந்த நிலையில் பணிகள் நிறுத்தப்பட்டு 7 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதனால் செவ்வாப்பேட்டை, திருவூர், அரண்வாயல் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் 5 கிலோ மீட்டர் துாரம் சுற்றி செல்லும் அவலம் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் செவ்வாய்பேட்டை ரெயில் நிலையம் அருகே ரெயில்வே பாலத்தின் கீழ் தற்காலிகமாக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், அங்கு மழை காரணமாக இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கியதில் அவ்வழியே செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் செவ்வாப்பேட்டை ரெயில் நிலையத்தில் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென வலியுறுத்தி நேற்று முன்தினம் மாலை மின்சார புறநகர் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து, நேற்று ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி, நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் ரெயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த பூந்தமல்லி சரக உதவி போலீஸ் கமிஷனர் முத்துவேல் பாண்டி, திருவள்ளூர் தாசில்தார் மதியழகன், செவ்வாப்பேட்டை இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், ரெயில்வே பாதுகாப்பு படை உதவி ஆணையர் பிராஜய, அரக்கோணம் ரெயில்வே இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்