தமிழில் அர்ச்சனை: பாடலீஸ்வரர் கோவிலுக்குள் நுழைய முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது
|தமிழில் அர்ச்சனை செய்ய வலியுறுத்தி பாடலீஸ்வரர் கோவிலுக்குள் நுழைய முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்:
தமிழர் கோவில்களில், தமிழில் வழிபாடு நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி சார்பில் மனு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும் என கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார்.
அதன்படி கடலூரில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் சாமிரவி தலைமையில் கட்சியினர் இன்று காலை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் சிவக்குமாரிடம் தமிழில் அர்ச்சனை செய்யக்கோரி மனு அளிப்பதற்காக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலுக்கு திரண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் பாடலீஸ்வரர் கோவிலுக்குள் செல்ல முயன்றனர். அப்போது அங்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர் தலைமையிலான போலீசார், நாம் தமிழர் கட்சியினரை கோவிலுக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.
இருப்பினும் நாம் தமிழர் கட்சியினர், கோவிலுக்குள் நுழைய முயன்றனர். உடனே அங்கிருந்த போலீசார் நாம் தமிழர் கட்சியினர் 11 பேரை கைது செய்து, சன்னதி தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.