< Back
மாநில செய்திகள்
நல்லகண்ணு பிறந்த நாள்: முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் வாழ்த்து
மாநில செய்திகள்

நல்லகண்ணு பிறந்த நாள்: முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் வாழ்த்து

தினத்தந்தி
|
26 Dec 2022 11:53 AM IST

98 வயதிலும் கொள்கை, லட்சியத்திற்கு இலக்கணமாக நல்லகண்ணு செயல்படுகிறார் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை,

இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லக்கண்ணுக்கு இன்று 98-வது பிறந்தநாள். இதையொட்டி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு அலுவலகத்திற்கு நேரில் சென்று நல்லக்கண்ணுக்கு பொன்னாடை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது நல்லக்கண்ணுவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தி பேசியதாவது:-

பொது வாழ்வில் ஒரு அரசியல் சிற்பியாக நமக்கு கிடைத்திருக்க கூடிய ஐயா நல்லக்கண்ணுவுக்கு இன்று 98-ம் ஆண்டு பிறந்தநாள். அவரது பிறந்தநாள் நிகழ்ச்சியில் உங்களோடு சேர்ந்து நானும் பங்கேற்று அவரை வாழ்த்துகிற அதே நேரத்தில், அவருக்கு எனது வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதில் பெருமைப்படுகிறேன்.

நமது அன்பிற்கினிய தோழர் முத்தரசன் சொன்னது போல, நம்முடைய தமிழக அரசின் சார்பில் 'தகைசால்' தமிழர் விருது ஒவ்வொரு ஆண்டும் நமது தலைவர் பெருமக்களை தேர்ந்தெடுத்து வழங்குவது என்று முடிவெடுத்து முதலாண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு இயக்க மூத்த தலைவர் சங்கரைய்யாவுக்கு வழங்கி பெருமைப்படுத்தி இருக்கிறோம்.

அதைத் தொடர்ந்து 2-வது ஆண்டு நம்முடைய ஐயா நல்லக்கண்ணுவுக்கு வழங்கி பெருமைப்படுத்தி இருக்கிறோம். என்னை பொறுத்தவரையில் அந்த தகைசால் தமிழர் விருதுக்கு பெருமை வந்து சேர்ந்திருக்கிறது என்று சொன்னால், அதை இவர்களுக்கெல்லாம் வழங்கிய காரணத்தால்தான். அந்த பெருமை அந்த விருதுக்கு கிடைத்திருக்கிறது. ஆகவே அந்த உணர்வோடு அரசின் சார்பில் அதை வழங்கி இருந்தாலும், இன்றைக்கு அரசின் சார்பிலே, தி.மு.க. சார்பிலே இந்த இனிய நிகழ்ச்சியிலே நானும் பங்கேற்று ஐயா நல்லக்கண்ணுவை வாழ்த்தி வணங்குகிறேன்.

இந்த 98 வயதிலும் அவர் கொண்ட கொள்கையில் இருந்து என்றைக்கும் விலகி விடாமல் கொள்கைக்கு இலக்கணமாக, லட்சியத்திற்கு இலக்கணமாக, இந்த பணியை அவர் தள்ளாத வயதிலும் ஆற்றிக் கொண்டிருக்கிற அரும்பணியை தொடர வேண்டும். இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால் பாசிச ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்கு நாம் எடுத்திருக்கிற முயற்சிக்கு வழிகாட்டியாக நல்லக்கண்ணு விளங்கிக் கொண்டிருக்கிறார்.

அது மட்டுமல்ல இந்த அரசுக்கும் உங்களால் உருவாக்கப்பட்டிருக்கிற மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியுடைய தி.மு.க. அரசுக்கும் ஒரு பக்கபலமாக இருந்து எப்படி தொடர்ந்து வழிகாட்டியாக இருக்கிறாரோ அதேபோல் வழிகாட்டியாக இருந்து பணியாற்றிட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்