கணவனுடன் சேர்ந்து வாழ அனுமதி கேட்டு நளினி வழக்கு; மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
|திருச்சி அகதிகள் முகாமில் இருக்கும் கணவர் முருகனை தன்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்று நளினி தொடர்ந்த வழக்கிற்கு மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அகதிகள் முகாம்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேருக்கு முதலில் தூக்குத் தண்டனையும், பின்னர் ஆயுள் தண்டனையாகவும் குறைக்கப்பட்டது. இந்த நிலையில், 7 பேரையும் விடுவித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதில் முருகன் இலங்கையை சேர்ந்தவர் என்பதால், அவர் திருச்சியில் உள்ள வெளிநாட்டு அகதிகள் முகாமுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், தனது கணவரை அகதிகள் முகாமில் இருந்து விடுவித்து தன்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்க கோரி, மத்திய அரசுக்கு அவரது மனைவி நளினி கோரிக்கை மனு அனுப்பினார்.
வாழ்வதற்கு அனுமதி
அந்த மனு பரிசீலிக்கப்படாததால், அதை பரிசீலிக்க உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில் நளினி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், "லண்டனில் வசிக்கும் மகளுடன் சேர்ந்து வாழ கணவர் முருகன் விரும்புகிறார். பாஸ்போர்ட் பெறுவது தொடர்பாக அவர் இலங்கை தூதரகத்தை தொடர்பு கொள்ள வேண்டியுள்ளது. அதனால் திருவான்மியூரில் வசிக்கும் என்னுடன் சேர்ந்து வாழ அனுமதி அளிக்க வேண்டும். அதற்காக அவரை அகதிகள் முகாமில் இருந்து விடுவிக்க வேண்டும். தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்த பல வெளிநாட்டவர்களை சில நிபந்தனைகளின் அடிப்படையில் உறவினர்களுடன் வாழ அரசு அனுமதித்துள்ளது. சிலரை வெளிநாடுகளில் தஞ்சம் புகவும் அரசு அனுமதித்துள்ளது. அதுபோல, என் கணவரை என்னுடன் வாழ அனுமதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.
பதில் மனு
இந்த மனு நீதிபதி என்.சேஷசாயி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் எம்.ராதாகிருஷ்ணன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, நீதிபதி, "இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகளின் எழுத்துப்பூர்வமான பதில் மனுக்களை 6 வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டார்.