< Back
மாநில செய்திகள்
சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் நளினி மேல்முறையீடு
மாநில செய்திகள்

சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் நளினி மேல்முறையீடு

தினத்தந்தி
|
11 Aug 2022 5:06 PM IST

சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் நளினி தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளான நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரை விடுவிக்க சென்னை ஐகோர்ட்டு ஏற்கெனவே மறுத்துவிட்டது.

குறிப்பாக ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்துள்ள நிலையில், அதே விவகாரம் தொடர்பான வழக்கு நிலைக்கத்தக்கது அல்ல என அவர்களுடைய மனுவை தள்ளுபடி செய்தது.

மேலும் இந்திய அரசியல் சாசனம் 161 வது பிரிவின் படி முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக கவர்னரின் கையெழுத்து அவசியம் என்று சுப்ரீம் கோர்ட்டு தெளிவுபடுத்தியுள்ளதாக ஐகோர்ட்டு சுட்டிக்காட்டியுள்ளது.

இத்துடன் கவர்னருக்கு அமைச்சரவை தீர்மானத்தை அனுப்பியதன் மூலம் அவரது ஒப்புதல் இல்லாமல் அரசே விடுதலை செய்யலாம் என கூற முடியாது எனவும் ஐகோர்ட்டு தெரிவித்திருந்தது. அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவெடுக்க தாமதித்தால் கவர்னர் ஒப்புதல் தேவையில்லை என்ற நளினி தரப்பு வாதத்தையும் ஐகோர்ட்டு ஏற்க மறுத்தது.

இந்த நிலையில் பேரறிவாளன் வழக்கில் கவர்னர் கையெழுத்து இல்லாமல் குற்றவாளிகளை விடுதலை செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறவில்லை என்றும், மாறாக தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்துள்ளது என்றும் ஐகோர்ட்டு தெரிவித்துள்ள நிலையில், அன்மையில் ரவிச்சந்திரன் சார்பில் கடந்த மாதம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து நளினி தரப்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் பேரறிவாளனை விடுதலை செய்தது போல தன்னையும் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்