மதுரை
மதுரை வழியாக செல்லும் நாகர்கோவில் ெரயில்கள் நெல்லையில் இருந்து இயக்கம்
|தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக மதுரை வழியாக செல்லும் நாகர்கோவில் ெரயில்கள் நெல்லையில் இருந்து இயக்கப்படுகின்றன.
நெல்லை அருகே செங்குளம்-வட பணகுடி இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. இதற்காக அந்தப் பாதையில் செல்லும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை வழியாக திருச்சி வரை இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.22628) வருகிற 21-ந் தேதி மற்றும் 24-ந் தேதிகளில் நெல்லை வரை ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் நெல்லையில் இருந்து வழக்கமான நேரத்தில் திருச்சிக்கு இயக்கப்படும்.
மறுமார்க்கத்தில் திருச்சியில் இருந்து மதுரை வழியாக திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.22627) 21-ந் தேதி மற்றும் 24-ந் தேதிகளில் நெல்லை வரை மட்டும் இயக்கப்படும். தாம்பரத்தில் இன்று (புதன்கிழமை) புறப்பட்டு மதுரை வழியாக நாகர்கோவில் வரை இயக்கப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.20691) நெல்லை வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக தாம்பரம் வரை இயக்கப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.20692) நாளை (வியாழக்கிழமை) ஒரு நாள் மட்டும் நாகர்கோவிலில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக நெல்லையிலிருந்து வழக்கமான நேரத்துக்கு தாம்பரம் புறப்பட்டு செல்லும்.
அதேபோல, தாம்பரத்தில் இருந்து இன்று நாகர்கோவில் புறப்படும் வாரம் 3 முறை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில், நெல்லையுடன் நிறுத்தப்படும். மறுமார்க்கத்தில், நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக தாம்பரம் ரெயில் நிலையத்திற்கு வாரம் 3 நாட்கள் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.22658) நாளை ஒரு நாள் மட்டும் நெல்லையிலிருந்து தாம்பரம் புறப்பட்டு செல்லும்.