< Back
மாநில செய்திகள்
நாகர்கோவில்-தாம்பரம் சிறப்பு ரெயில் 26-ந் தேதி இயக்கம்: புதுக்கோட்டையை புறக்கணித்த ரெயில்வே நிர்வாகம்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

நாகர்கோவில்-தாம்பரம் சிறப்பு ரெயில் 26-ந் தேதி இயக்கம்: புதுக்கோட்டையை புறக்கணித்த ரெயில்வே நிர்வாகம்

தினத்தந்தி
|
24 Dec 2022 12:43 AM IST

நாகர்கோவில்-தாம்பரத்திற்கு 26-ந் தேதி இயக்கப்படும் சிறப்பு ரெயில் புதுக்கோட்டையில் நிற்காமல் செல்லும் வகையில் ரெயில்வே நிர்வாகம் புறக்கணித்துள்ளதாக பயணிகள் குமுறுகின்றனர்.

சிறப்பு ரெயில்

கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வெளியூர்களில் வசித்து வேலைபார்ப்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை கொண்டாடுவது உண்டு. அதேபோல் பண்டிகை முடிந்து ஊருக்கும் திரும்புவார்கள். இதையொட்டி தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் தெற்கு ரெயில்வே சார்பிலும் சிறப்பு ரெயில்கள் இயக்குவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. இதில் புதுக்கோட்டை வழியாகவும் ஒரு சில ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில் நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இதில் நாகர்கோவிலில் இருந்து மாலை 5.10 மணிக்கு புறப்படும் (வண்டி எண் 06042) ரெயில் தாம்பரத்திற்கு மறுநாள் காலை 7.30 மணிக்கு சென்றடையும்.

புதுக்கோட்டையில் நிறுத்தம் இல்லை

இந்த ரெயில் வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இதில் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் ரெயில் நின்று செல்வதற்கான அறிவிப்பு இடம் பெறவில்லை.

புதுக்கோட்டை ரெயில் நிலையத்தை கடந்து தான் இந்த ரெயில் திருச்சி செல்ல வேண்டும். ஆனால் இந்த ரெயில் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் ஒரு நிமிடம் கூட நின்று செல்லாமல் இயக்கக்கூடிய வகையில் ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டு இந்த பயண நேர பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் புதுக்கோட்டையை ரெயில்வே நிா்வாகம் புறக்கணித்ததாக பயணிகள் குமுறுகின்றனர்.

பயணிகள் கோரிக்கை

மதுரை கோட்ட ரெயில்வே அதிகாரிகள், தெற்கு ரெயில்வே அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று இந்த சிறப்பு ரெயில் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சிறப்பு ரெயில் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் நின்று புறப்பட்டால் பயணிகள் இதில் பயணிக்க முடியும். பயணிகளும் பயன் அடைவார்கள். கடந்த காலங்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்ட போது புதுக்கோட்டை ரெயில் நிலையம் அதிக வருவாயை ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

எனவே புதுக்கோட்டை பயணிகள் பயன்பெறும் வகையில் இந்த ஊரை கடந்து செல்லக்கூடிய ரெயிலை ஒரு நிமிடம் நிறுத்தி இயக்கினால் ரெயில்வே நிர்வாகத்திற்கு வருமானத்தோடு, பயணிகளுக்கும் பெரும் வரப்பிரசாதமாக அமையும்.

மேலும் செய்திகள்