பேருந்தை மாணவிகள் தள்ளிய விவகாரம்: ஓட்டுனர், நடத்துனர் உள்ளிட்ட 4 பேர் சஸ்பெண்ட்
|நாகர்கோவில் அருகே பழுதாகி நின்ற அரசு பேருந்தை மாணவிகள் தள்ளிய விவகாரத்தில் ஓட்டுனர், நடத்துனர் உள்ளிட்ட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கடந்த 24-ஆம் தேதி மணக்குடிக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் அதிகமாக அமர்ந்திருந்தனர். அந்த பஸ் அண்ணா பஸ் நிலையத்தை விட்டு வெளியேறி கேப் ரோட்டில் பழைய தாலுகா அலுவலகம் அருகே வந்தபோது திடீரென பழுதாகி நடுவழியில் நின்றது.
டிரைவர் அந்த பஸ்சை இயக்க எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. இதற்கிடையே பஸ்சில் அமர்ந்திருந்த மாணவிகளுக்கு கல்லூரி தொடங்குவதற்கு முன்பு செல்ல வேண்டும் என்ற தவிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த மாணவிகள் பஸ்சை விட்டு இறங்கி, அதை தள்ளி இயங்க வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.
மாணவிகள் பஸ்சை தள்ளிவிட்ட வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதை பார்த்த பலரும் பஸ்சின் நிலைபற்றி விமர்சனம் செய்தும், மாணவிகளின் துணிச்சல் பற்றியும் கருத்துகளை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் கல்லூரி மாணவிகளை பேருந்து தள்ள வைத்த ஓட்டுனர், நடத்துனர், எலக்ட்ரீசியன், சூப்பர்வைசர் உள்ளிட்ட நான்கு பேர் மீது நாகர்கோவில் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இவர்கள் நான்கு பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்படுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.