மதுரை
நாகர்கோவில் காசியின் ஜாமீன் மனு தள்ளுபடி
|பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்டக்கூடும் என்பதால் நாகர்கோவில் காசியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்டக்கூடும் என்பதால் நாகர்கோவில் காசியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
பாலியல் வன்கொடுமை வழக்கு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டியன். இவரது மகன் சுஜி என்ற காசி. இவர் பல்வேறு சிறுமிகளை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த 2020-ம் ஆண்டு புகார்கள் வந்தன. இந்த புகார் குறித்து கன்னியாகுமரி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குபதிவு செய்து, காசி மற்றும் அவரது தந்தை தங்கப்பாண்டியனை கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே காசி ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை மதுரை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. பின்னர் அவரது தந்தை தங்கப்பாண்டியனுக்கு நிபந்தனை ஜாமீன் அளித்தது.
போலீசார் ஆட்சேபம்
காசி தனக்கு ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை ஏற்கனவே மதுரை ஐகோர்ட்டு விசாரித்தபோது, அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என போலீசார் ஆட்சேபம் தெரிவித்தனர். அப்போது, காசியின் செல்போன், லேப்டாப் ஆகியவற்றை சோதனை செய்தபோது, ஆபாசமான 1,900 புகைப்படங்களும், 400 வீடியோக்களும் இருந்தன. 120 சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆபாச வீடியோக்களை காண்பித்து சம்பந்தப்பட்ட சிறுமிகளை திரும்பத்திரும்ப பாலியல் வன்கொடுமையில் காசி ஈடுபடுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களில் சிலர்தான் புகார் தெரிவித்துள்ளனர். பிரதான வழக்கு விசாரணையை தாமதப்படுத்தும் வகையில் காசி, மீண்டும் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்து வருகிறார் என்று போலீசார் தெரிவித்து இருந்தனர்.
ஜாமீன் மனு தள்ளுபடி
இதை பதிவு செய்து கொண்ட ஐகோர்ட்டு, இந்த ஜாமீன் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்து இருந்தது. இந்த நிலையில் காசியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நீதிபதி ஜெகதீஷ் சந்திரா நேற்று பிறப்பித்தார்.
அதில், மனுதாரர் காசி மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் பல பெண்கள் மற்றும் சிறுமிகள் சாட்சியங்கள் அளித்துள்ளனர். மேலும் சிலர் சாட்சியம் அளிக்க உள்ளனர்.
தற்போது உள்ள சூழ்நிலையில் காசிக்கு ஜாமீன் வழங்கினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளை மிரட்டி சாட்சியங்களை கலைக்க வாய்ப்பு உள்ளது. எனவே காசியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டார்.