ரவுடி நாகேந்திரனை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி
|ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை,
சென்னை பெரம்பூரில் கடந்த மாதம் 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தற்போது வரை இந்த வழக்கில் 23 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்குப் பின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் ரவுடி திருவேங்கடம் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
தொடர்ந்து இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான பொன்னை பாலு, அருள், ராமு உள்ளிட்டோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில், தமிழ்நாடு இளைஞர் காங்கிரசின் முன்னாள் நிர்வாகியும், வழக்கறிஞருமான அஸ்வத்தாமனை கடந்த 7ம் தேதி செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அவரைத்தொடர்ந்து வேலூர் சிறையில் இருந்த பிரபல ரவுடியும், அஸ்வத்தாமனின் தந்தையுமான நாகேந்திரனை கடந்த 9ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். இருவரும் சேர்ந்துதான் ஆம்ஸ்ட்ராங்க் கொலைக்கு ரவுடி சம்போ செந்திலுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியது விசாரணையில் தெரிய வந்தது.
இந்த நிலையில் ரவுடி நாகேந்திரன் இன்று பிற்பகல் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெகதீஸ் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது செம்பியம் தனிப்படை போலீசார் தரப்பில் நாகேந்திரனிடம் விசாரிக்க 7 நாட்கள் அனுமதி வேண்டும் என மனு தாக்கல் செய்தனர்.
அப்போது போலீஸ் காவலில் செல்ல மறுப்பு தெரிவித்த நாகேந்திரன், ரவுடி திருவேங்கடம் என்கவுண்டரில் கொல்லப்பட்டது போல், என்னையும் என்கவுண்டர் செய்து விடுவார்கள் என அச்சம் தெரிவித்துள்ளார். மேலும் உடல் நிலை பாதிக்கப்பட்டு, வாரம் 2 முறை டயாலிசிஸ் செய்து வருவதாக கூறி போலீஸ் கஸ்டடிக்கு அனுப்ப வேண்டாம் என கோரினார்.
இந்த நிலையில் நாகேந்திரனுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் அனுமதி வழங்கி நீதிபதி ஜெகதீஸ் உத்தரவிட்டார். அஸ்வத்தாமனுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல் நேற்று வழங்கப்பட்ட நிலையில், இன்று அவரது தந்தை ரவுடி நாகேந்திரனுக்கும் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் பல முக்கியமான தகவல்கள் வெளிவரும் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.