நாகப்பட்டினம்
நாகை - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
|நாகை - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
நாகை-தஞ்ைச தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலை அமைக்கும் பணி
நாகை - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை பணி ரூ.105 கோடி மதிப்பீட்டில் கடந்த 1-ந்தேதி நாகையில் தொடங்கப்பட்டது. இதையடுத்து நாகை அருகே புத்தூரில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 15 தினங்களுக்கு முன்பு புதிய சாலை அமைக்கும் பணிகள் தொடங்கின.
மஞ்சக்கொல்லை, பொரவச்சேரி, சிக்கல் ராமர் மடம், ஆழியூர், அகரகடம்பனூர், கீழ்வேளூர் வரை 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் நடந்து வருகின்றன. இதனால் தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து கீழ்வேளூர் வழியாக செல்லும் பிரதான சாலையில் பஸ், கார் மற்றும் சரக்கு வாகனங்கள், வேளாங்கண்ணி, நாகை நாகூர் பகுதிகளுக்கு செல்பவர்கள் தினமும் சாலையில் செல்லமுடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
வாகன ஓட்டிகள் அவதி
இந்த பணிகளால் கீழ்வேளூர், அகரகடம்பனூர், ஆழியூர், ராமர் மடம், சிக்கல், பொரவச்சேரி, மஞ்சக்கொல்லை ஆகிய பகுதியில் கடைகள், ஓட்டல் வைத்து நடத்தி வரும் வியாபாரிகள் குடியிருப்பு வாசிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பணிக்காக ஆங்காங்கே சாலையில் தோண்டப்பட்ட பள்ளங்களில் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். மேலும் காற்றில் புழுதி மண் பறப்பதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டமுடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் நலன்கருதி விரைந்து நாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.
விரைந்து முடிக்க வேண்டும்
இதுகுறித்து கீழ்வேளூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி கணேசன் கூறுகையில், நாகை- தஞ்சை தேசிய நெடுஞ்சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் சேதமடைந்து இருந்தது. பல போராட்டங்களுக்கு பிறகு தற்போது புதிய சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. புத்தூரில் இருந்து கீழ்வேளூர் வரை 15 கிலோமீட்டர் தூரம் வரை சாலையில் ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
மேலும் காற்றினால் புழுதி மண், ஜல்லி துகள்கள் பறக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்ட முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.