நாகை: வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு
|நாகை அருகே வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம்,
நாகப்பட்டினம் மாவட்டம், செல்லூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் நள்ளிரவில் திடீரென அவரது வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. இதில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த அவரது மனைவி பாண்டிமீனா மற்றும் 2 வயது குழந்தை யாசின் ராம் இருவரும் பலத்த காயமடைந்தனர்.
இந்த நிலையில் அவர்களது அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக வந்து அவர்களை மீட்டு நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பாண்டிமீனாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குழந்தையின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செல்லூர் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசால் சுனாமி குடியிருப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன. தற்போது அனைத்து வீடுகளிலும் மேற்கூரைகள் சிதிலமடைந்து, சுவர்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் ஆய்வு செய்து வீடுகளை புதுப்பித்து தர வேண்டும் என்றும் குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.