காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் அருகே தொடர் மழையால் நிரம்பிய நடவாவி கிணறு
|காஞ்சீபுரம் அருகே தொடர்மழையால் நடவாவி கிணறு நிரம்பி உள்ளது.
காஞ்சீபுரத்தை அடுத்த அய்யங்கார்குளம் பகுதியில் சஞ்சீவிராயர் கோவில் உள்ளது. சஞ்சீவிராயர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு அருகே, உள்ள பெரிய குளத்தின் அருகே விஜயநகர மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட நடவாவி கிணறு உள்ளது.
நடவாவி என்றால் படிக்கட்டுள்ள கிணறு என்று அர்த்தம். இந்த கிணற்றுக்கு செல்ல தரை மட்டத்தில் இருந்து படிக்கட்டுடன் கூடிய சுரங்கம் போன்ற பாதை உள்ளது. அந்த பாதையில் இறங்கி சென்றால் கருங்கல்லால் ஆன அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த 16 கால் மண்டபத்தை காணலாம். தரைமட்டத்தில் இருந்து கீழே செல்ல 48 படிகள் உள்ளன. இதில் 27 படிகளை கடந்தால் அந்த 16 கால்மண்டபத்தை நாம் அடைய முடியும்.
மேலும் இந்த கிணற்றுக்குள் செல்ல அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகள் வழியாக கீழே சென்றால் எப்போதும் தண்ணீ்ர் நிறைந்து காணப்படும் இந்த நடவாவி கிணற்றிலுள்ள பெரிய கிணற்றில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று ஒருநாள் மட்டுமே உள்ளிருக்கும் நீரை முழுவதுமாக வெளியேற்றி அன்று மாலை பூமிக்கு அடியில் கிணறு அமைந்துள்ள 16 கால் மண்டபத்தில் உலக புகழ்பெற்ற காஞ்சீபுரம் வரதராஜ பெருமாளை எழுந்தருள செய்வார்கள். அதன் பின் மறுநாள் மாலையில் ராமர், லட்சுமணன், சீதை ஆகியோரையும் அந்த மண்டபத்தில் எழுந்தருள செய்வார்கள். அப்போது 2 நாட்கள் மட்டும் பூமிக்கு அடியில் கிணற்றுக்குள் சாமியை தரிசிக்கலாம். அதன்பின் கிணற்றில் நீரூற்று பெருக்கெடுத்து மண்டபத்தையும் கிணற்றையும் நிரப்பிவிடும்.
குறிப்பாக இந்த நடவாவி கிணறு வான்வழி பார்வையில் சாவி போன்ற அமைப்பில் காணப்படுகிறது. இந்த நிலையில் தற்போது மாண்டஸ் புயல் மற்றும் வடக்குகிழக்கு பருவமழையை யொட்டி பெய்த தொடர் கன மழையின் காரணமாக இந்த நடவாவி கிணறு முற்றிலுமாக மழை நீரால் நிரம்பி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது. தற்போது நடவாவி கிணற்றுக்கு செல்லும் படிக்கட்டுகளில் 4 படிக்கட்டுகள் மட்டுமே நீரில்லாமல் வெளியே தெரிகிறது. மீதமுள்ள அனைத்து படிகட்டுகளும் முழுவதுமாக நீர் நிரம்பி காணப்படுகிறது.