< Back
மாநில செய்திகள்
தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்துக்கு 2-வது முறையாக தேசிய தர அங்கீகாரம்
சென்னை
மாநில செய்திகள்

தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்துக்கு 2-வது முறையாக தேசிய தர அங்கீகாரம்

தினத்தந்தி
|
8 May 2023 10:52 AM IST

தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்துக்கு 2-வது முறையாக தேசிய தர அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த தாம்பரம், சானடோரியத்தில் 14.78 ஏக்கர் பரப்பில் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இந்த ஆஸ்பத்திரி வளாகத்தில் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம் அமைந்துள்ளது. 200 படுக்கை வசதிகளுடன் ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது.

தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் பலரும் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். நாள்தோறும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். இந்த தேசிய சித்த மருத்துவ நிறுவனத்துக்கு ஆஸ்பத்திரிகளுக்கான தர அங்கீகாரத்தை கடந்த 2018-ம் ஆண்டு தேசிய தர நிர்ணய வாரியம் (என்.ஏ.பி.எச்) வழங்கியது. இந்த அங்கீகார சான்று 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படும். இடையில் கொரோனா காரணமாக வழங்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் தொடர்ச்சியாக 2-வது முறையாக ஆஸ்பத்திரிகளுக்கான தர அங்கீகாரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அங்கீகார சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் நடந்தது. ஆயுஷ் அமைச்சகத்தின் செயலர் வைத்ய ராஜேஷ் கோடேச்சா மறு அங்கீகார சான்றிதழை, தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் ஆர்.மீனா குமாரியிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் சிறப்பு செயலர் பிரமோத்குமார் பதக், தேசிய தர நிர்ணய வாரிய தலைமை செயல் அலுவலர் அதுல்மோகன் கோச்சார் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்