< Back
மாநில செய்திகள்
நாமக்கல்லில்  அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல்லில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
26 Sep 2022 6:45 PM GMT

நாமக்கல்லில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் நேற்று 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சமையல் கியாஸ் சிலிண்டர்

தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் உபயோகப்படுத்தும் சமையல் கியாஸ் சிலிண்டருக்கான முழு தொகையையும் அரசு வழங்க வேண்டும். இல்லையெனில் ஆண்டுக்கு 4 சிலிண்டர்களை அரசே வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். 3 ஆண்டுகள் பணியாற்றிய பணியாளர்களுக்கு நிபந்தனையின்றி பதவி உயர்வு வழங்க வேண்டும்.

ஏற்கனவே வழங்கிய செல்போன்கள் பழுதாகி உள்ளதால், அனைவருக்கும் புதிய செல்போன்கள் வழங்க வேண்டும். திட்டபணிகளை தவிர மற்ற பணிகள் வழங்கக் கூடாது என்பவை உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில், நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கோரிக்கைகள்

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாண்டிமாதேவி தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்டசெயலாளர் முருகேசன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். சங்க நிர்வாகிகள் காந்திமதி, ஜெயமணி, குர்ஷித், அம்பிகா, ஜமுனா, சசிகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில துணைத்தலைவர் ஜெயக்கொடி, மாவட்ட செயலாளர் பிரேமா, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வேலுசாமி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

உணவூட்டும் செலவினங்கள்

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது 15 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் மையத்தை ஒன்றோடு ஒன்று இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். உணவூட்டும் செலவினங்களை உயர்த்தி வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது.

========

மேலும் செய்திகள்