< Back
மாநில செய்திகள்
எண்ணூரில் நாம் தமிழர் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்; சீமான் பங்கேற்பு
சென்னை
மாநில செய்திகள்

எண்ணூரில் நாம் தமிழர் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்; சீமான் பங்கேற்பு

தினத்தந்தி
|
1 Aug 2022 8:29 AM GMT

எண்ணூர் பஜாரில் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவொற்றியூர்,

கொசஸ்தலை ஆறும், பக்கிங்காம் கால்வாயும் எண்ணூர் முகத்துவாரத்தில் கடலில் கலக்கிறது. இந்த முகத்துவாரம் பகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்கள், நண்டுகள், இறால்களை பிடிப்பார்கள். வடசென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து சுடுநீர் ஆற்றில் விடப்படுகிறது. உலர் சாம்பல்களும் இப்பகுதியில் விடப்படுகிறது. தற்போது ஆற்றின் குறுக்கே உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதற்காக சாலைகள் அமைக்கப்பட்டு கான்கிரீட்டுகள் போடப்பட்டு வருகின்றன. இதனால் மீன்பிடி தொழில் செய்ய முடியாமல் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இப்பகுதியை ஆய்வு செய்து 31-ந் தேதிக்குள் இதை அகற்றாவிட்டால் இங்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக கூறி இருந்தார். ஆனால் அது அகற்றப்படாததால் நேற்று எண்ணூர் பஜாரில் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் நிருபர்களிடம் சீமான் கூறியதாவது:-

செஸ் ஒலிம்பியாட் போட்டி பேனர்களில் பிரதமரின் படம் போடாதது தவறுதான். அவரை அழைக்காமல் இவர்களே நடத்தி இருக்க வேண்டும். ஆனால் அவரை அழைத்துவிட்டு படம் போடாதது பிரதமரை அவமதிக்கும் செயல். எண்ணூரில் ஆற்றை மறித்து சாலைகள் போடப்படுகிறது. கான்கிரீட் தூண்கள் நிறுவப்படுகின்றன. இதனால் மீன்வளம் முற்றிலும் பாதிக்கப்படுவதுடன், மீனவர்கள் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்படும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக இதையெல்லாம் அகற்றுவோம். அப்போது இத்தனை ஆயிரம் கோடி நஷ்டம் என அதிகாரிகள் சொல்லக்கூடாது. இப்போதே அதை அகற்றுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்