< Back
மாநில செய்திகள்
ஓசூரில், 2 நாட்கள் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் வேலைநிறுத்த போராட்டம்-சங்க தலைவர் பேட்டி
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

ஓசூரில், 2 நாட்கள் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் வேலைநிறுத்த போராட்டம்-சங்க தலைவர் பேட்டி

தினத்தந்தி
|
30 Jun 2022 10:28 PM IST

ஓசூரில், 2 நாட்கள் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளதாக சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

ஓசூர்:

ஓசூர் சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் (ஹோஸ்டியா) சங்க தலைவர் கே.வேல்முருகன், சங்க அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஓசூரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் வாகன உதிரி பாகங்கள் மற்றும் இதர பொறியியல் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த நிறுவனங்கள் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை அளிக்கிறது. தற்போது இந்த நிறுவனங்கள் கடும் சவாலான சூழ்நிலையை சந்தித்து வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாக உற்பத்தி செலவு பன்மடங்கு பெருகி வருகிறது. குறிப்பாக, எந்திரங்கள், மூலப்பொருட்களின் விலை, ஊதியம், பராமரிப்பு செலவு, மின்கட்டணம் உள்ளிட்டவை பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஏற்கனவே ஜி.எஸ்.டி. நெருக்கடி, கொரோனா ஊரடங்கு முடக்கம் போன்றவற்றினால் 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து மூடப்பட்டுள்ளன. கடன் நெருக்கடியால் பல தொழில்முனைவோர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், மீதமுள்ள நிறுவனங்களை காப்பாற்ற, அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் மற்றும் ஜாப் ஆர்டர்களுக்கு உரிய நியாயமான விலையை வழங்க பெருநிறுவன வாடிக்கையாளர்கள் முன்வரவேண்டும் என்று வலியுறுத்தியும், சிறு, குறு நிறுவனங்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு சுமூக தீர்வு காணவும் வலியுறுத்தி, சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் வருகிற 13-ந் தேதி மற்றும் 14-ந் தேதி ஆகிய 2 நாட்கள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி 13-ந்தேதி காலை 10.30 மணியளவில் மிகப்பெரிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, இணைத்தலைவர் எஸ்.மூர்த்தி, ஹோஸ்டியா செயலாளர் ஸ்ரீதரன், பொருளாளர் வடிவேல், முன்னாள் தலைவர் வெற்றி ஞானசேகரன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்